நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைய இடமளிக்க முடியாது – ஜனாதிபதி

அரசாங்கத்தின் பாரிய பொருளாதார இலக்குகளை அடைந்துகொள்வதற்கான கொள்கைகள் நாட்டில் முன் வைக்கப்பட்டுள்ளதால் அவற்றை அடைந்துக்கொள்ளும் பயணத்தில் தர்க்க ரீதியற்ற சட்ட திட்டங்களை தடையாக எடுத்துக்கொள்ளத் தேவையில்லை என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் பெருந்தோட்ட, கைத்தொழில்துறைக்கு சொந்தமான நிறுவனங்களின் தலைவர்களுடன் நேற்று பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனை தெரிவித்தார்.

பெருந்தோட்ட, கைத்தொழில் துறையுடன் தொடர்புடைய நீண்ட காலமாக இருந்துவரும் பிரச்சினைகளை தீர்ப்பதற்காக இக்கலந்துரையாடலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

அரசாங்க மற்றும் அதனுடன் இணைந்த நிறுவனங்களில் இருந்து வரும் பிரச்சினைகளை சட்ட வழிமுறைகளுக்கு செல்லாது கலந்துரையாடல் மூலம் தீர்த்துக்கொள்ள வேண்டும் என்று ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

அரச மரக் கூட்டுத்தாபனம் மற்றும் அரச பெருந்தோட்ட கம்பனிக்கு இடையில் நீண்ட காலமாக இருந்து வரும் சட்ட ரீதியான பிரச்சினை குறித்தும் விரிவாக கலந்துரையாடப்பட்டது.

‘நாட்டுக்கும் சுற்றாடல் பாதுகாப்புக்கும் பொருத்தமற்ற வனப் பயிர்களை அகற்றி நாட்டுக்கு பொருத்தமான பயிர்களை அறிமுகம் செய்ய வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

திறைசேறிக்கு சுமையாக இல்லாத வகையில் அரச நிறுவனங்களை நடத்த வேண்டும். இதற்காக திட்டங்களை முன்வைக்கும் போது நீண்ட காலம் எடுக்கக் கூடாது.

அந்தந்த நிறுவனங்களுக்கு இடையில் புரிந்துணர்வுடனும் அரச கொள்கைகளை விளங்கிக் கொண்டும் செயற்படுவதன் மூலம் பெரும்பாலான பிரச்சினைகளை தீர்த்துக்கொள்ள முடியும்.

அரசாங்கம் சரியான கொள்கை சார்ந்த தீர்மானமொன்றை எடுக்கும் போது அனைத்து அரச நிறுவனங்களும் அக்கொள்கைகளுக்கு ஏற்ப செயற்பட வேண்டும்.

சரியானதை செய்வதற்கு ஒருபோதும் தடையிருக்கக் கூடாது. சரியானதை செய்ய முடியாத அரச அதிகாரி நாட்டுக்கு ஒரு சுமை. அரச அதிகாரிகளின் பொறுப்பு பிரச்சினையை தீர்ப்பதன்றி அதிலிருந்து விலகிக்கொள்வதல்ல’ என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

பல வருடங்களாக எதனோல் இறக்குமதி காரணமாக நாட்டின் பொருளாதாரத்திற்கு பாரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளதனால் அதனை நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுத்ததாக குறிப்பிட்ட ஜனாதிபதி, தனியார் வியாபாரிகளின் அழுத்தங்களுக்கு அடிபனிந்து அத்தீர்மானத்தை மாற்றப்போவதில்லை என்றும் கூறினார்.

இக்கலந்துரையாடலில் அமைச்சர் ரமேஷ் பதிரண மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ. ஜயசுந்தர ஆகியோர் உட்பட அதிகாரிகள் பலர் பங்குபற்றியிருந்தனர்.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!