கொரோனா இன்னும் சமூக பரவல் நிலையை அடையவில்லை!!

இலங்கையில், கொரோனா வைரஸ் தொற்று, இன்னும் சமூக பரவலுக்கு உள்ளாகவில்லை என, சுகாதார அதிகாரிகள் மற்றும் கொரோனா தொற்று ஒழிப்புக்கான விசேட தொற்று நோயியல் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சிக்கும், சுகாதார அதிகாரிகள் மற்றும் கொரோனா தொற்று ஒழிப்புக்கான விசேட தொற்று நோயியல் பிரிவினருக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல், இன்று கொழும்பில் இடம்பெற்ற போது, இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்ஷ ஆகியோரால் வழங்கப்படும் ஆலோசணைகளுக்கு அமைய, கொரோனாவை தடுக்கும் பணிகள் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது என்பதற்கு, இந்த விடயமே சான்றாகும் என, சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி குறிப்பிட்டார்.

நாட்டில் படிப்படியாக முடக்கத்தை தளர்த்துவதன் மூலம், வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்துவதற்காக வகுக்கப்பட்டுள்ள, விதிகளை மக்கள் பின்பற்றுகிறார்களா என்பதை, பிராந்திய அளவில், பொது சுகாதார ஆய்வாளர்கள் ஆராய வேண்டும் எனவும், அமைச்சர் கேட்டுக்கொண்டார்.

அத்துடன், சுகாதார ஆலோசனையை மீறுபவர்கள் மீது, கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க பொலிஸாருக்கு அறிவுறுத்தப்படும் என, அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி தெரிவித்தார்.

இதேவேளை, மழை காலம் ஆரம்பித்துள்ளதால், டெங்கு நோய் தாக்கம் ஏற்படக்கூடும் என்பதால், டெங்கு ஒழிப்பு திட்டங்களில் கவனம் செலுத்துமாறு, தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு அதிகாரிகளுக்கு, சுகாதார அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!