அம்பாறை – திருக்கோவில் திருட்டுச் சம்பவங்கள்! (படங்கள் இணைப்பு)

அம்பாறை – திருக்கோவில் பொலிஸ் பிரிவில் திருட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.

அம்பாறை திருக்கோவில் பொலிஸ் பிரிவில் நேற்று நள்ளிரவில் வீட்டில் உறங்கிக் கொண்டு இருந்த பெண்ணின் கழுத்தில் அணிந்திருந்த தாலி திருடுபோயுள்ளதாக திருக்கோவில் பொலிஸில் குறித்த பெண் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளதாக திருக்கோவில் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

திருக்கோவில் காயத்திரி கிராமம் 1ம் வீதியில் உள்ள வீடு ஒன்றிலே இவ்வாறு தாலி திருடு போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக அங்கு வினவியபோது வெள்ளிக்கிழமை இரவு குறித்த பெண் வீட்டின் மண்டபத்தில் தனது மகனுடன் உறங்கிக் கொண்டு இருந்தவேளை கழுத்தில் இருந்த தாலி மர்மமான முறையில் திருடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளன.

வெள்ளிக்கிழமை இரவு அனைவரும் வீட்டில் உறங்கிக் கொண்டு இருந்த வேளை வீட்டின் மேற்கு பக்கமாக உள்ள ஜன்னலைத் திறந்து அதனுடாக வீட்டுக்குள் கள்ளன் நுழைந்து பெண்ணின் தாலியை திருடி இருக்கலாம் என வீட்டார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

இதேவேளை மேற்படி குறித்த வீதியில் உள்ள மற்றுமோர் வீட்டில் இருந்து சிறுவர்கள் அணியும் மோதிரங்கள் மற்றும் உண்டியல் என்பனவும் களவு போய்யுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றன.

திருட்டுச் சம்பவங்கள் தொடர்பாக திருக்கோவில் பொலிசாருக்கு இன்று தகவல் வழங்கப்பட்டதைத் தொடர்ந்து பெரும் குற்றப் புலனாய்வு பொலிஸ் பொறுப்பதிகாரி எஸ்.எம்.சதாத் சம்பவ இடத்திற்குச் சென்று பார்வையிட்டதுடன் இவ் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை திருக்கோவில் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.(நி)

Recommended For You

About the Author: Karthikesu

error: Content is protected !!