குடும்ப தகராறு காரணமாக மனைவியை கத்தியால் குத்திக் கொலை செய்த குடும்பத்தலைவர் எதிர்வரும் 12ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் குடும்ப தகராறு காரணமாக மனைவியை கத்தியால் குத்திக் கொலை செய்த குடும்பத்தலைவரை எதிர்வரும் 12ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் ஏ.எஸ்.பி.போல் உத்தரவிட்டார்.
யாழ்ப்பாணம் குருநகர் சென்றொக் வாசிகசாலைக்கு அருகில் வசிக்கும் 3 பிள்ளைகளின் தாயரான 47 வயதுடைய ஜே.யு.பொலினியா என்பவரே கணவரின் கத்திக் குத்துக்கு இலக்காகி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார்.
இந்தச் சம்பவம் நேற்று முன்தினம் இடம்பெற்றது.
உயிரிழந்த பெண்ணின் உடலில் கழுத்து உள்பட 12 இடங்களில் கத்திக் குத்து இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முச்சக்கர வண்டி சாரதியான குடும்பத்தலைவரிடம் மனைவி தினமும் பணம் கேட்டும் வருமானம் குறித்துக் கேட்டும் தொல்லை தருவதாகவும் அதனால் ஏற்பட்ட முரண்பாடே கொலைக்குக் காரணமானது என பொலிஸாரின் விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.
இந்நிலையில் மனைவியைக் கத்தியால் சராமாரியாகக் குத்திவிட்டு ஜோச் எமிலியாம்பிள்ளை என்ற குடும்பத்தலைவர் தலைமறைவாகி இருந்த நிலையில், நேற்று முன்தினம் மாலை யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையில் சரணடைந்திருந்தார்.
விசாரணைகளின் பின்னர் சந்தேகநபர் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் நேற்று முற்படுத்தப்பட்டார்.
இதன்போது வழக்கை விசாரித்த நீதிவான், சந்தேகநபரை வரும் 12ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.