பாடசாலை மாணவர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் உள்ளிட்ட இலட்சக்கணக்கான இளைஞர்களின் வாழ்க்கையை காவுகொள்ளும், சட்டவிரோத போதைப்பொருள் கடத்தலை தடுக்கும் முகமாகவும், தேசத்தின் எதிர்கால சந்ததியினரின் வாழ்க்கையை பாதுகாப்பதற்காகவும், போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட வேண்டும் என, ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
இன்று, பொலன்னறுவை லங்காபுர விஜித்த மகா வித்தியாலயத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் இவ்வாறு குறிப்பிட்டார்.
போதைப்பொருள் கடத்தல்கள் தொடர்பில், குற்றவாளிகளாக சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் நால்வருக்கு, மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கு நான் கையெழுத்திட்டுள்ளேன்.
அதற்கு எதிராக கருத்து தெரிவிக்கும் அனைத்து தரப்பினரும், போதைப்பொருள் கடத்தலுக்கு துணைபோகும் நபர்களாவர்.
சட்டவிரோத போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு, மரண தண்டனையை நிறைவேற்றுவதற்காக, நான் கையொப்பமிட்டதன் பின்புலத்தில், எவர் தொடர்பிலும் தனிப்பட்ட விரோதங்கள் இல்லை. சமூக நலன் கருத்தியே தான் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளேன்.
அதனால் அந்த செயற்பாட்டினை வீழ்த்துவதற்கு, யாரும் முயற்சிக்க கூடாது.
நேற்றையதினம் நான் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளருடன் தொலைபேசி உரையாடலில் ஈடுபட்டு, இந்த விடயம் தொடர்பில் தெளிவூட்டியுள்ளேன்.
சட்டவிரோத போதைப்பொருளுக்கு எதிரான போராட்டம் அண்மையில் ஆரம்பிக்கப்பட்டதல்ல.
இந்த கொடிய அச்சுறுத்தலில் இருந்து தேசத்தை விடுவிப்பதற்கு, நீண்ட காலமாகவே நான் பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றேன்.
அந்த நடவடிக்கைகளின் போது ஏற்பட்ட தடைகளை, ஜனாதிபதி என்ற வகையில் அனைவரினதும் பங்களிப்புடன் வெற்றிகரமான நிறைவை நோக்கி முன்னெடுத்து செல்கின்றேன்.
என குறிப்பிட்டுள்ளார்.(சி)