சஹ்ரானின் காத்தான்குடி முகாமில் இருந்து வாள்கள் மீட்பு

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஒல்லிக்குளம் பகுதியில், ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகளின் முகாமில் இருந்து, இன்று இரண்டாவது நாளாகவும் பெருமளவு வாள்கள் கத்திகள் மீட்கப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.

தேசிய தௌபீக் ஜமாத்தின் தலைவர் மொஹமட் சஹ்ரானின் சகாவான, சவுதியில் கைது செய்யப்பட்ட மில்ஹான் என்பவர் வழங்கிய தகவலின் அடிப்படையில், ஒல்லிக்குளம் பகுதியில் உள்ள, ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகளின் முகாமில் இருந்து, நேற்று பெருமளவான வெடி பொருட்கள் மீட்கப்பட்டிருந்தன.

கொழும்பில் இருந்து, மில்ஹான் மற்றும் சஹ்ரானின் சாரதியான கபூர் எனப்படும் மொஹமட் சரீப் ஆதம்லெப்பை ஆகியோர், கடும் பாதுகாப்புக்கு மத்தியில் அழைத்துச் செல்லப்பட்டு, இந்த வெடி பொருட்கள் ஒல்லிக்குளத்தில் மீட்கப்பட்டுள்ளன.

இதன் போது, 300 ஜெலிக்நைட் குச்சிகள், ஆயிரம் டெட்டனேட்டர்கள் மீட்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இன்றும் மில்ஹான் மற்றும் சஹ்ரானின் சாரதியான கபூர் எனப்படும் மொஹமட் சரீப் ஆதம்லெப்பை ஆகியோர் அழைத்துச் செல்லப்பட்டு, தேடுதல் மேற்கொள்ளப்பட்ட நிலையில், சீன தயாரிப்பு வாள்கள் 49 மற்றும் நாட்டு வாள்கள் 5 உம் கைப்பற்றப்பட்டதாக, பொலிஸார் தெரிவித்தனர்.

கடும் பாதுகாப்புக்கு மத்தியில், விசேட அதிரடிப்படையின் மற்றும் குற்றப்புலனாய்வு துறையினரினால் இந்த வெடி பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ள.

கடந்த மாதம், காத்தான்குடி ஒல்லிக்குளத்தில், தற்கொலை குண்டுத் தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரியான மொஹமட் சஹ்ரான் பயன்படுத்திய பிரதான முகாம் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், இந்த வெடி பொருட்களும் அப்பகுதியில் கைப்பற்றப்பட்டுள்ளன.

தேசிய தௌபீக் ஜமாத்தின் ஆயுதப் பிரிவுக்கான தலைவராக மில்ஹான் செயற்பட்டுள்ளதுடன், வவுணதீவு பொலிஸார் இருவரின் கொலையும், இவரின் தலைமையில் நடைபெற்றுள்ளதாக, விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.(சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!