ஜனாதிபதி செயலகத்தின் தேசிய போதைப்பொருள் ஒழிப்பு வேலைத்திட்டத்துடன் இணைந்ததாக, போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பான விழிப்பூட்டல் நிகழ்வு, இன்று மட்டக்களப்பு மண்முனை மேற்கு பிரதேச சபையினால் முன்னெடுக்கப்பட்டது.
மட்டக்களப்பு மண்முனை மேற்கு பிரதேச சபையின் தவிசளர் எஸ்.சண்முகராஜா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், மண்முனை மேற்கு பிரதேச சபை செயலாளர் சர்வேஸ்வரன், மற்றும் உதவித் தவிசாளர், பிரதேச சபை உறுப்பினர்கள், பிரதேச சபை உத்தியோகத்தர்கள், வவுணதீவு பொலிஸ் அதிகாரிகள், வவுணதீவு பரமேஸ்வரா வித்தியாலய அதிபர், மாணவர்கள் என பலர் கலந்துகொண்டனர்.
ஜனாதிபதி செயலகத்தின் பணிப்புரைக்கமைவாக மேற்படி போதைப்பொருள் ஒழிப்பு வேலைத்திட்டம், இம்மாதம் 23 ஆம் திகதி தொடக்கம் எதிர்வரும் யூலை 01 ஆம் திகதி வரை போதைப்பொருள் ஒழிப்பு வாரமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.
இன்று மண்முனை மேற்கு பிரதேச சபையின் ஏற்பாட்டில் நடைபெற்ற இவ் விழிப்புணர்வு பேரணி, வவுணதீவு பரமேஸ்வரா வித்தியாலயத்தில் ஆரம்பமாகி வவுணதீவு சந்தி ஊடாக பிரதேச சபையை சென்றடைந்து, அங்கு போதைப் பொருள் விழிப்புணர்வு நிகழ்வுகளும் இடம்பெற்றது.(சி)