ஜனாதிபதியின் தேசிய போதைப்பொருள் ஒழிப்பு வார வேலைத்திட்டத்தின் கீழ் கிழக்கு மாகாண கிராமிய அபிவிருத்தி திணைக்களத்தின் அனுசரணையில் ஆலையடிவேம்பு பிரதேச செயலக கிராம அபிவிருத்தி பிரிவினர் முன்னெடுத்த போதைப்பொருள் விழிப்புணர்வு நாடகம் மற்றும் சுய தொழில் முயற்சி கடன் வழங்கல் சான்றோர் கௌரவிப்பு ஆகிய நிகழ்வுகள் ஆலையடிவேம்பு பிரதேச செயலக கலாசார மண்டபத்தில் இன்று (28)நடைபெற்றது.
பிரதேச செயலகத்தின் கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் பி.கோபிகாந் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் பிரதேச செயலாளர் கே.லவநாதன்இ உதவிப்பிரதேச செயலாளர் ரி.கஜேந்திரன்இ மாவட்ட கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.ரி.ஏ.நாகிப் நிருவாக உத்தியோகத்தர் ஆ.சசீந்திரன்இ அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ்.எம்.றிஜால்டீன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
போதையை இல்லாதொழிப்போம் எனும் கருப்பொருளுக்கமைய நாவற்காடு பெண்கள் அபிவிருத்தி சங்கத்தின் உறுப்பினர்கள் இணைந்து வழங்கிய “குடி குடியை கெடுக்கும்’’ விழிப்புணர்வு நாடகம் அனைவரையும் இங்கு வெகுவாக ஈர்க்கச் செய்தது.
தொடர்ந்து பெண்கள் அபிவிருத்தி சங்கத்தின் உயர்வுக்காய் உழைத்துவரும் பனங்காடு பெண்கள் அபிவிருத்தி சங்க தலைவி அமராவதி வடிவேல் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டதுடன் மாவட்ட கிராம அபிவிருத்தி உத்தியோகத்தராக பதவியுயர்வு பெற்ற எம்.ரி.ஏ.நாகிப் மற்றும் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் கே.லவநாதன் ஆகியோர் ஏற்பாட்டாளர்களால் கௌரவிக்கப்பட்டனர்.
இந்நிகழ்வில் சிறந்த சேமிப்புடன் செயற்பட்டுவரும் பனங்காடு கிராம அபிவிருத்தி சங்கத்தின் சேமிப்பில் உள்ள 45 இலட்சம் ரூபா 48 அங்கத்தவர்களுக்கு சுயதொழில் கடனாக வழங்கி வைக்கப்பட்டது. நிகழ்வில் சங்கத்தின் அங்கத்தவர்கள் பலரும் கலந்து கொண்டனர்.