மடகாஸ்கர் சுதந்திரத்தினத்தில் 16 பேர் பலி

மடகாஸ்கர் நாட்டில் சுதந்திர தின கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 16 பேர் பலியாகினர்.

ஆப்பிரிக்க கண்டத்தின் தென்கிழக்கே இந்திய பெருங்கடலில் அமைந்துள்ள ஒரு தீவு நாடு மடகாஸ்கர். இங்கு நேற்று முன்தினம் 59-வது ஆண்டு சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது.

இதையொட்டி தலைநகர் ஆண்டனநரிவோவில் உள்ள மைதானத்தில் ராணுவ வீரர்களின் அணிவகுப்பு மற்றும் இசை நிகழ்சிகள் உள்ளிட்ட கண்கவர் நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதனை பார்வையிட ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டனர். மைதானத்தில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. அவர்கள் ஆரவாரத்துடன் கலைநிகழ்ச்சிகளை பார்த்து ரசித்தனர்.

நிகழ்ச்சிகள் முடிந்த பிறகு மைதானத்தின் பல நுழைவாயில்கள் வழியாக மக்கள் கூட்டம் கூட்டமாக மைதானத்தை விட்டு வெளியேறினர். இதனால் மைதானத்துக்கு வெளியே கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.

தொடர்ச்சியாக ஒரே நேரத்தில் வெளியேறியதனால் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த முடியாது என்பதால், பொலிஸார் மைதானத்தின் நுழைவாயில்களை அடைத்து மக்களை வெளியே செல்லவிடாமல் தடுத்தனர்.

பின்னர் ஓரிரு நுழைவாயில்களை மட்டும் திறந்து, மக்களை ஒவ்வொரு குழுவாக பிரித்து வெளியே அனுப்பினர். இதனால் பொறுமையை இழந்த மக்கள் ஒருவரை ஒருவர் முண்டியடித்துக்கொண்டு வெளியேற முயன்றனர்.

நுழைவாயில்களை நோக்கி மக்கள் கூட்டம் கூட்டமாக படையெடுத்ததால் கட்டுக்கு அடங்காத கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் பலர் கீழே விழுந்தனர். அவர்கள் மீது, கூட்டத்தினர் ஏறி மிதித்து சென்றனர்.

இதனால் மைதானமே போர்க்களமாக காட்சி அளித்தது. கூட்ட நெரிசலில் சிக்கி 16 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தனர். மேலும் 75 பேர் படுகாயம் அடைந்தனர்.(சே)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!