மலையகத்தில் முன்னெடுக்கப்பட்ட கட்டாய கருத்தடை குறித்து விசாரணை வேண்டும்-திலகர் எம்.பி 

தற்போது நாட்டில் சனத்தொகையை இன ரீதியாகக் கட்டுப்படுத்தும் கைங்கரியங்கள் இடம்பெறுவதாகவும் அதுபற்றிய தீர்க்கமான விசாரணைகள் வேண்டும் எனவும் பலவாறான கோரிக்கைகள் எழுகின்றன. அவ்வாறான விசாரணைகள் மேற்கொள்ளப்படுமாயின் மலையகத்தமிழ் மக்கள் மீது திட்டமிடப்பட்ட வகையில் மேற்கொள்ளப்பட்ட கட்டாய கருத்தடை  திட்டம் தொடர்பில் தீர்க்கமான விசாரணை மேற்கொள்ளப்படல் வேண்டும் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜ் வேண்டுகோள்விடுத்தார்.
அவசரகால சட்டத்தை மேலும் ஒரு மாத காலத்துக்கு நீடிப்பது தொடர்பான  பொதுமக்கள் பாதுகாப்புச் சட்டம் மீதான பாராளுமன்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
நாட்டடில் ஏற்பட்டிருக்கும் அசாதாரண சூழ்நிலை காரணமாக இன்று நாங்கள் அவசரகால நிலைமையின் மேலும் ஒரு மாதத்துக்கு நீடிக்கும் பிரேரணையை முன்வைக்க வேண்டிய நிலையில் உள்ளோம். கடந்த மூன்று தசாப்த காலங்களாக பயங்கரவாத நடவடிக்கைக ளுடனோ அல்லது நேரடியாக விடுதலை போராட்டங்களுடனோ தொடர்பில்லாத சந்தரப்பங்களிலும் கூட அவரகாலச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு பயங்கரவாதச் சட்ட்த்தின் கீழ் குற்றஞ்சாட்டப்பட்டு சிறைவாசம் அனுபவிக்க நேர்ந்த சமூகத்தின் பிரதிநிதி என்ற வகையில் அவசர காலச்சட்டம் நடைமுறையில் இருப்பதை அனுமதிக்க முடியாது. எனினும் இன்று நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை மீண்டும் அவசரகால சட்டத்தை பேசுபொருளாக்கியிருக்கிறது.
இன்று நாம் இந்த சட்டங்களின் மூலம்  பாதுகாப்பு எனும் போர்வையில் பாடசாலைகளுக்கு முன்பாக ஆயுதம் தாங்கிய படைகளை நிறுத்தி வைத்துள்ளோம். அது பிள்ளைகளின் பாதுகாப்புக்கானதாக இருக்கலாம். ஆனால், தினமும் ஆயுதம் தாங்கிய இராணுவத்தையும் கடந்தே எமது மாணவர்கள் பாடசாலைக்கு செல்வதன் உளவியல் தாக்கத்தை  நாங்கள் புரிந்துகொள்ள வேண்டியுள்ளது.
 குறிப்பாக ஆண் பிள்ளைகள் அந்த ஆயுதங்களை பற்றி தெரிந்துக்கொள்வதில் ஆர்வம் காட்டுகிறார்கள். அது பின்னாளில் அவர்களை எவ்வாறு உருவாக்கப் போகின்றது எனும் கேள்வி எழுகின்றது. மறுபுறம் பெண் பிள்ளைகள் பயந்த சுபாவத்தை அடைகிறார்கள். இது அவர்களில் உளவில் தாக்கத்தை ஏற்படுத்து கின்றது. வீட்டிலே விளையாடும் சிறுவர்கள் தமது விளையாட்டில் அடையாள அட்டை கோருவதையும் உடற்பரிசோதனை  செய்வதையும் தமது விளையாட்டில் அங்கமாக சேர்த்துக்கொள்கிறார்கள். இல்லாவிட்டால் தமது வீட்டில் குண்டு வெடிக்கும் என கருதுகிறார்கள்.
இந்த உளவியல் மனநிலை எமது எதிர்கால சந்ததியனருக்கு உகந்தது அல்ல. எனவே பாதுகாப்பு எனும் பெயரில் நாம் எத்தனை காலத்திற்கு பாடசாலைகளுக்கு முன்னதாக ஆயுதம் தாங்கிய ராணுவத்தை நிறுத்தப்போ கிறோம் எனும் தீர்மானத்தை இந்த பாராளு மன்றம் எடுக்க வேண்டியுள்ளது. இது தொடர்பில் பாதுகாப்பு அமைச்சு கவனம் செலுத்த வேண்டியுள்ளது.
அவசர காலசட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பில் பல முறை கோரிக்கை வைத்தும் அரசாங்கம் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆயிரக்கணக்கான விடுதலைப்புலி உறுப்பினர்களை புனர்வாழ் வளித்து விடுதலை செய்தபோதும் நூறுக்கு குறைவான தமிழ் இளைஞர்களை உரிய விசாரணையின்றி தடுத்து வைத்திருப்பது வேதைனைக்குரியது.
கண்டி தலதா மாளிகை மீது தாக்குதல் நடாத்திய பிரதான சூத்திரதாரிகள் விடுதலை பெற்றுவிட்ட நிலையில் அதனோடு தொடர்புடையதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவர்கள் இன்னும் சிறையில் வாடுகின்றனர். இத்தகைய  அப்பாவி இளைஞர்கள் விடுதலை செய்யப்படல் வேண்டும்.
இன்று நாட்டில் சனத்தொகை தொடர்பில் இனரீதியாகவும் மத ரீதியாகவும் கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன. கடந்த பாராளுமன்ற அமர்வில் உரையாற்றிய முன்னாள் அமைச்சர் ரவூப் ஹக்கீம் புள்ளி விபரங்களுடன் தரவுகள் முன்வைத்தார். அதில் நூறு ஆண்டுகளுக்கு முன்னர் 23.5 சதவீதமாக இருந்த நாட்டின் இந்து சனத்தொகை தற்போது 12.5 சதவீதமாக உள்ளது என குறிப்பிட்டார். நான் மதரீதியாகவோ இன ரீதியாகவே எனது கருத்தை முன்வைக்க வில்லை. இந்துக்களில் பெருளமவானோர் தமிழர்கள் என்கின்ற வகையில் தமிழர்கள் பெருமளவில் இந்த நாட்டில் குறைவடைந்துள் ளார்கள் என்பதை சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது.
பொதுவாக இந்த நாட்டில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தம் காரணமாக தமிழ் மக்கள் புலம் பெயர்ந்து சென்றதும் உயிர்களை இழந்ததும் காரணமாக இருக்கலாம் என யாரும் எண்ணக் கூடும். எனினும் மலையக நிலையில் இதற்கு வேறான காரணங்கள் உண்டு. இந்த நாட்டில் மலையக மக்கள் மீது பிரதானமானது நான்கு அநீதிகள் மேற்கொள்ளப்பட்டது.
ஒன்று அவர்களின் குடியுரிமை பறிக்கப்பட்டமை, இரண்டாவது கொத்து கொத்தாக லட்சக்கணக்கில் சிறிமா – சாஸ்திரி ஒப்பந்தத்தின் கீழ் இந்தியாவுக்கு நாடு கடத்தியமை மூன்று பொருளாதார ரீதியாக அவர்களை நசுக்கும் வகையில் பெருந்தோட்ட பொருளாதாரத்தை திட்டமிட்டு வீழ்ச்சி அடையச் செய்தமை நான்காவது மலையக மக்கள் மீது திட்டமிடப்பட்ட வகையில் கட்டாய கருத்ததடை முறைமை நடைமுறைப்படுத்தியமை  வெவ்வேறு காலகட்டங்களில் இந்த அநீதிகள் நடந்தேறின.
 1985 ஆம் ஆண்டுக்கும் 2015 ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலப்பகுகியில் மலையகப் பெருந்தோட்டப் பகுதிகளில் திட்டமிடப்பட்ட வகையில் கட்டாய கருத்தடை நிகழ்ச்சித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன என்பதை அந்த மக்களின் பிரதிநிதிநதி என்ற வகையில் உயரிய பாராளுமன்றத்தில் முன்வைக்கிறேன்.
 தற்போது நாட்டில் சனத்தொகையை இன ரீதியாகக் கட்டுப்படுத்தும் கைங்கரியங்கள் இடம்பெறுவதாகவும் அதுபற்றிய தீர்க்கமான விசாரணைகள் வேண்டும் எனவும் பலவாறான கோரிக்கைகள் எழுகின்றன. அவ்வாறான விசாரணைகள் மேற்கொள்ளப்படுமாயின் மலையகதமிழ் மக்கள் மீது திட்டமிடப்பட் டவகையில் மேற்கொள்ளப்பட்ட கட்டாய கருத்தடை  திட்டம் தொடர்பில் தீர்க்கமான நீதி  விசாரணை மேற்கொள்ளப்படல் வேண்டும். எமது மக்களுக்கு நியாயம் பெற்றுக்கொடுக்கப்படல் வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!