225 பா.ம.உறுப்பினர்களும் தமது சொத்துகள் தொடர்பான விபரங்களை வெளியிடவேண்டும்

225 பாராளுமன்ற உறுப்பினர்களின் 2018 – 2019 ஆண்டுக்குரிய சொத்து மற்றும் பொறுப்பு விபரங்களை பகிரங்கமாக வெளியிடுமாறு ட்ரான்ஸ்பேரன்ஸி இன்டர்நெஷனல் அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.

கடிதம் மூலம் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களிடமும் இதனை வலியுறுத்தியிருக்கும் அவ்வமைப்பு, பாராளுமன்ற உறுப்பினர்கள் பகிரங்கப்படுத்தும் சொத்து, பொறுப்பு விபரங்களை www.tisrilanka.org/MPasstls இணையத்தளத்தில் பொதுமக்கள் பார்வையிடக்கூடிய வகையில் வெளியிடுவதற்கும் ஏற்பாடு செய்துள்ளது.

கிருலப்பனையிலுள்ள ட்ரான்ஸ்பேரன்ஸி இன்டர்நெஷனல் அமைப்பின் அலுவலகத்தில் இன்று வியாழக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்விடயம் தொடர்பில் விளக்கமளிக்கப்பட்டது.

ட்ரான்ஸ்பேரன்ஸி இன்டர்நெஷனல் அமைப்பின் செயற்பாட்டாளர் சங்கீதா குணரத்ன இதுகுறித்து மேலும் கூறியதாவது:

வருடாந்தம் அனைத்துப் பாராளுமன்ற உறுப்பினர்களும் தமது சொத்து, பொறுப்பு விபரங்களை சபாநாயகரிடமும் அமைச்சரவை அமைச்சர்கள், பிரதி மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் ஜனாதிபதியிடமும் கையளிக்க வேண்டும்.

எனினும் அவ்வாறு கையளிக்கப்படும் விபரங்கள் பொதுமக்கள் பார்வையிடக்கூடிய வகையில் பகிரங்க ஆவணங்களாக வெளியிடப்படுவதில்லை.

அதற்கமைய பாராளுமன்ற உறுப்பினர்கள் 2018/2019 ஆண்டுக்குரிய தமது சொத்து, பொறுப்பு விபரங்களை இம்மாதம் 30ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமைக்கு முன்னர் சபாநாயகரிடம் அல்லது ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்க வேண்டும்.

அவ்வாறு சமர்ப்பக்கப்படும் ஆவணங்களை பொதுமக்கள் பார்வையிடத்தக்க வகையில் பகிரங்கமாக வெளியிடுமாறு 225 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் நாங்கள் அழைப்பு விடுக்கின்றோம்.

அதன்மூலம் பாராளுமன்ற உறுப்பினர்கள் தம்மீது சுமத்தப்படுகின்ற மோசடிக் குற்றச்சாட்டுக்கள் பொய்யானவை என்பதை ஆதாரபூர்வமாக நிரூபிக்க முடியும் என்பதுடன், மக்களும் இந்த ஆவணங்களைப் பார்வையிடுவதன் ஊடாக எதிர்வரும் தேர்தல்களில் தாம் தெரிவுசெய்ய வேண்டிய மக்கள் பிரதிநிதிகள் குறித்த சிறப்பான தீர்மானங்களை மேற்கொள்ள முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார் .(சே)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!