அரசை வீட்டிற்கு அனுப்பவும் நாங்கள் தயங்கமாட்டோம்

விடுதலை போராட்ட காலத்தில் தமிழ் மக்கள் எவ்வாறு தமிழ்த்தேசியத்திற்காக குரல் கொடுத்து உழைத்தீர்களோ அதேபோன்று இன்றும் செயற்பட வேண்டும். நமது எண்ணமும் சிந்தனையும் தமிழ் இனத்தின் பாதுகாப்பை மையப்படுத்தியே இருக்க வேண்டும் எனவும் அம்பாரை மாவட்ட தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் தெரிவித்தார்.

ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திற்குட்பட்ட பிரிவுகளில் புனரமைக்கப்படவுள்ள 471 குறை வீட்டுத்திட்ட பயனாளிகளை சந்தித்து அவர்களின் குறை நிறைகளை கேட்டறியும் கூட்டமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் கே.லவநாதன் தலைமையில் பாராளுமன்ற உறுப்பினரின் இணைப்பாளர் எம்.காளிதாசனின் ஒழுங்கமைப்பில்; பிரதேச சபை கலாசார மண்டபத்தில் நேற்று மாலை (26) இடம்பெற்ற இந்நிகழ்வில் உதவிப்பிரதேச செயலாளர் ரி.கஜேந்திரன், உதவித்தி;ட்டமிடல் பணிப்பளார் எஸ்.உதயகுமார் பாராளுமன்ற உறுப்பினரின் செயலாளர் ரி.சுரேன் இணைப்பாளர் ஆர்.ஜெகநாதன் உள்ளிட்ட பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.
அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில் …
வலுவிழந்த பல கட்சிகள் இன்று தமிழ்த்தேசிய கூட்டமைப்பை உடைப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்கின்றன. தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் மீது சேறு பூசுவதற்காக பல எதிர்வீச்சு கணைகளை தொடுக்கின்றன. அதனை கண்டு தமிழ் மக்கள் யாரும் ஏமாறா வேண்டாம். அன்று தொடக்கம் இன்று வரை தமிழ் மக்களின் உரிமைக்காக போராடும் ஒரே கட்சி தமிழ்த்தேசிய கூட்டமைப்பு மாத்திரமே என்பதை சொல்லி வைக்க விரும்புவதுடன் இதனை யாரும் மறுக்க முடியாது எனவும் கூறினார்.

மேலும் தமிழ் மக்களாகிய நீங்கள் அளித்த வாக்குகள் மூலம் நாம் பலத்தை பெற்றுள்ளோம். அந்த பலத்தை எதிர்காலத்திலும் வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்கின்றேன். மாறாக அற்ப சொற்ப ஆசைகளுக்காக அடிபணிந்து மாற்றுக்கட்சிகளுக்கு வாக்களித்து தமிழ் மக்களின் பலத்தை உடைத்துவிடக்கூடாது என்பதையும் அவ்வாறு நீங்கள் அளிக்கும் வாக்குகள் நமக்கெதிராகவே திரும்பி நம்மையே குழிதோண்டிப்புதைக்கும் என்பதையும் மறந்து விடக்கூடாது என்பதையும் கூறி வைக்க விரும்புகிறேன்.

இதேவேளை ஆலையடிவேம்பிலும் அம்பாரை மாவட்டத்திலும் யாராலும் மேற்கொள்ள முடியாத பல கோடி ரூபா அபிவிருத்தி திட்டங்கள் 10இற்கும் மேற்பட்ட வீடமைப்பு திட்டங்கள் மட்டுமல்லாது பல அபிவிருத்திகள் தன்னால் மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

எது எவ்வாறாயினும் தமிழர்களுக்கு அநீதி விழைவிக்கப்படுமானால் இருக்கின்ற அரசை வீட்டிற்கு அனுப்பவும் நாங்கள் தயங்கமாட்டோம். இன்று நினைத்தாலும் அரசாங்கத்தை வீட்டிற்கு அனுப்பும் அந்த சக்தியை தமிழ்த்தேசிய கூட்டமைப்பு கொண்டுள்ளது என்பதையும் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும் என்றார்.

 

Recommended For You

About the Author: Suhirthakumar

error: Content is protected !!