கிழக்கில் ஊரடங்கு தளர்த்தப்பட்ட நிலையில் மக்கள் பொட் கொள்வனவிற்கு முண்டியடிப்பு!!

அம்பாறை மாவட்டத்தில் ஊரடங்கு சட்டம் இன்று காலை முதல் தளர்த்தப்பட்ட நிலையில் பொது மக்கள் தங்களுக்கு தேவையான அத்தியாவசிய உணவுப் பொருட்களை கொள்வனவு செய்வதில் அதிக ஆர்வம் காட்டி வந்ததுடன் சில இடங்களில் அரசாங்கத்தின் அறிவுறுத்தல்களை பின்பற்றாத நிலையினையும் காண முடிந்தது.

இதற்கமைவாக அம்பாறை மாவட்ட அக்கரைப்பற்று ஆலையடிவேம்பு சந்தை பிரதேசங்களில் மக்கள் வெள்ளம் இன்று காலை முதல் அலைமோதியதையும் அவதானிக்க முடிந்தது என எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

பாதுகாப்பு படையினர் அர்ப்பணிப்போடு கடமையில் ஈடு படுத்தப்பட்டிருந்ததுடன் முகக்கவசம் அணியாதவர்களுக்கு ஆலோசனை வழங்கி வீடுகளுக்கு திருப்பி அனுப்புவதையும் காண முடிந்தது.

அக்கரைப்பற்று பொலிசார் மற்றும் இராணுவத்தினர் களத்தில் நின்று மக்களுக்கு ஆலோசனை வழங்கி வருவதையும் பொலிசார் ஒலிபெருக்கி மூலம் மக்களை அறிவுறுத்தல் வழங்குவதையும் சத்தோச மற்றும் எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் நீண்ட வரிசையில் தேவையானவற்றை பெற்றுக்கொள்ள மக்கள் வெள்ளம் காத்திருந்ததையும் அங்கு கண்டுகொள்ள முடிந்தது.

இதேநேரம் காரைதீவு இளைஞர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மூலம் அன்புக்கரங்கள் அமைப்பின் உதவியுடன் ஆலையடிவேம்பு பிரதேசத்தில் கொரோனா விழிப்புணர்வு துண்டுப்பிரசுரங்களை வழங்கியதுடன் முகக்கவசங்கள் இல்லாது சென்ற மக்களுக்கு முககவசங்களை அணிவிக்கும் பணியிலும் ஈடுபட்டதை அவதானிக்க முடிந்தது.

இது இவ்வாறிருக்க மக்களின் நலன் கருதி அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் அம்பாறை மாவட்ட சமுர்த்தி பணிப்பாளரின் உத்தரவிற்கமைய மக்களுக்கு இலகுவான முறையில் பொருட்களை நிர்ணய விலையில் பெற்றுக்கொடுக்கும் பணி சமுர்த்தி வங்கிகளினூடாக நாளை முதல் பெற்றுக்கொடுக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.

சத்தோச நிலையங்களில் இருந்து சமுர்த்தி வங்கிகளினூடாக மொத்தமாக பெறப்படும் உலர் உணவு பொதிகள் குறித்த பிரதேசத்தின் கிராம உத்தியோகத்தர் பிரிவுகளுக்கு பொறுப்பான சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தரின் கண்காணிப்பில் சமுர்த்தி அடிப்படை அமைப்பின் உதவியோடு பிரிவு ரீதியாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அதேபோன்று கல்முனையில் பொலிஸாரின் ஒத்துழைப்பில் பொதுமக்கள் நெருக்கடியின்றி பொருட்களை கொள்வனவு செய்தனர்.

இன்று கல்முனையில் பொலிஸார் மற்றும் சுகாதாரப்பிரிவினரின் அறிவுறுத்தலுக்கு இணங்க பொதுமக்கள் அத்தியாவசியப் பொருட்களை நெருக்கடி இன்றி கொள்வனவு செய்வதற்கு ஒத்துழைப்பு வழங்கியிருந்தனர்.

கடந்த 23 ஆம் திகதி ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்ட போது கல்முனை நகரில் பாரிய சன நெருக்கடியும் போக்குவரத்துப் பிரச்சினையும் ஏற்பட்டிருந்தது. இதனைக் கருத்தில் கொண்டு இன்று ஊரடங்குசட்டம் தளர்த்தப்பட்ட போது மக்கள் பாதுகாப்பாக பொருட்களை கொள்வனவு செய்வதற்கான ஏற்பாடுகளை கல்முனை பொலிஸார், கல்முனை மாநகரசபையினர், கல்முனை பிராந்திய சுகாதாரப்பிரிவினர் ஏற்பாடு செய்திருந்தனர்.

இதற்கமைய பல்வேறு இடங்களிலும் வியாபாரிகள் தங்களுடைய பொருட்களை விற்பனை செய்வதற்கான சந்தையினை திறந்த வெளிகளில் நடத்துவதற்கு தீர்மானித்திருந்தனர்.

இதன்படி கல்முனை சந்தாங்கேணி விளையாட்டு மைதானம், நற்பிட்டிமுனை, மருதமுனை, பாண்டிருப்பு, சாய்ந்தமருது ஆகிய இடங்களிலுள்ள திறந்த வெளியகளில் இன்று வியாபாரிகள் தங்களது வியாபார நடவடிக்கையில் ஈடுபட்டதினால் பொதுமக்கள் தங்களுடைய அத்தியாவசியப் பொருட்களை நெருக்கடியின்றி பெற்றுக்கொண்டனர்.

பொதுமக்களை கொரோனா தொற்றில் இருந்து பாதுகாப்பதற்கான நடவடிக்கைக்கு பொதுமக்கள் தங்களது பூரண ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என கல்முனை விசேட குற்றப்புலனாய்வுப் பொறுப்பதிகாரி எம்.எல்.றபீக் தெரிவித்தார்.

இதேவேளை அட்டாளைச்சேனைப் பிரதேசத்தில் அத்தியவசியப் பொருட்களைக் கொள்வனவு செய்வதற்காக மக்கள் ஆர்வத்துடன் ஈடுபட்டிருந்ததை காணக்கூடியதாக இருந்தது.

மூடப்பட்டிருந்த வர்த்தக நிலையங்கள், வங்கிகள், எரிபொருள் நிரப்பு நிலையங்கள் என்பன திறக்கப்பட்டிருந்ததுடன் போக்குவரத்து சேவைகளும் இடம்பெற்றன.

அத்தோடு பாதுகாப்பான முறையில் நின்று பொருட் கொள்வனவில் ஈடுபடுமாறு அட்டாளைச்சேனை பிரதேச சபை பொதுமக்களை ஒலிபெருக்கி மூலம் கேட்டுக்கொண்டது.

பிரதேசமெங்கும் பொலிஸாரும் இரானுவத்தினரும் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்ததுடன் முகக்கவசம் அணிவதுடன் சட்டநடைமுறைகள் தொடர்பில் மக்களுக்கு அறிவுரைகளை வழங்கினர்.

மக்களுக்கான சேவையினை தடையின் வழங்குவதற்கும், பாதுகாப்பான பொருள் வினியோகத்தை வழங்கும் வகையிலும் பொலிஸார் மற்றும் பிரதேச செயலகங்கள், மதஸ்தலங்கள், பிரதேச சபைகள் என்பன இணைந்து செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!