பயங்கரவாதம் முடிந்துவிட்டது என கூற முடியாது : இராணுவத்தளபதி

தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் தொடர்பான கைது நடவடிக்கைகள் தொடர்பில், அதிகாரத்தில் உள்ள எந்தவொரு நபரும் அழுத்தங்கள் எதனையும் பிரயோக்கவில்லை என, இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.
ஏப்ரல் 21 தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் குறித்து விசாரணை நடத்த நியமிக்கப்பட்ட பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு முன்னிலையில் சாட்சியமளித்த போது இவ்வாறு தெரிவித்தார்.

யாரும் எதிர்பாரத நேரத்தில் இடம்பெற்ற இந்த தாக்குதலை அடுத்து, இராணுவ தரப்பினர் ஏனைய பாதுகாப்பு துறையினருடன் இணைந்து முன்னெடுத்த பாதுகாப்பு நகர்வுகளை நாம் மதிக்கின்றோம்.
ஏப்ரல் 21 ஆம் திகதி சம்பவம் இடம்பெற்ற பின்னர் இராணுவ தளபதி என்ற வகையில் இராணுவத்தினரை பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தினேன்.
எனக்குரிய அதிகாரங்களுக்கமைய தேடுதல்கள், விசாரணைகள் உள்ளிட்ட நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தோம்.
அந்த சந்தர்ப்பத்தின் போது ஏப்ரல் 26 ஆம் திகதி இசான் அஹமட் என்பவர், தெஹிவளை பகுதியில் கைது செய்யப்பட்டிருந்தார்.
அப்போது எனக்கு அமைச்சர் ரிஷாத் பதியூதின் தொலைபேசி அழைப்பை எடுத்தார்.
எனது தொலைபேசி இலகத்தை சகலரும் அறிவார்கள்.
அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோரும் கதைப்பார்கள்.
இதன்படி அவரும் கதைத்துள்ளார்.
குறித்த தினத்தில் அந்த நபரின் பெயரை குறிப்பிட்டு, அவரை கைது செய்யதீர்களா என கேட்டார்.
அது பற்றி எனக்கு தெரியாது, நான் ஆராய்ந்து கூறுவதாக கூறினேன்.
பின்னர் இராண்டாவது தடவையாகவும் கேட்ட போது இன்னும் தேடுவதாக கூறியிருந்தேன்.
இராணுவ புலனாய்வு பிரிவை சேர்ந்தவர்களிடம் குறித்த நபர் கைது செய்யப்பட்டுல்ளாரா என கேட்டேன்.
பின்னர் கேட்ட போது அவர் கைது செய்யப்பட்டிருந்தமை தொடர்பாக உறுதியாகியிருந்தது.
அப்போது இது பற்றி, இன்னும் ஒன்றரை வருடங்களின் பின்னரே இனி தொலைபேசி அழைப்பை எடுக்க வேண்டுமென கூறியிருந்தேன்.
பயங்கரவாத தடுப்பு பிரிவில் அவரை ஒன்றரை வருடங்களுக்கும் விசாரணைக்காக வைத்திருக்க முடியும்.
என்ற காரணத்திற்காகவே நான் அவ்வாறு கூறியிருந்தேன்.
எவ்வாறாயினும் அவர் எனக்கு எவ்வித அழுத்தமும் கொடுக்கவில்லை.
கோரிக்கையையே செய்திருந்தார்.
தனது அமைச்சில் பணியாற்றும் உயர் அதிகாரியின் மகன் என்பதனால், அது தொடர்பாக ஆராய்ந்து பார்க்குமாறே கூறியிருந்தார்.
அதை தவிர்ந்து அமைச்சரோ அல்லது வேறு எந்த அதிகாரியோ எனக்கு எந்த அழுத்தமும் கொடுக்கவில்லை.
கைது செய்யப்பட்ட நபர்களை விடுவிக்க எவரும் அழுத்தம் கொடுக்கவில்லை.
எந்த தரப்பில் இருந்தும் அழுத்தம் வரவில்லை.
குறிப்பாக ரிஷாத் எக்காரணம் கொண்டும் எனக்கு அழுத்தம் கொடுக்கவில்லை என்று என்னால் உறுதியாக கூற முடியும்.
இந்த விடயத்தில் ஜனாதிபதியோ பிரதமரோ எந்தவொரு அமைச்சரோ எனக்கு அழுத்தம் கொடுக்கவில்லை.
இராணுவம் சுயாதீனமாக செயற்படவே முடிந்தது.
எனது அறிவுக்கு அமைய, பயங்கரவாத தடுப்புச்சட்டமே அப்போது இருந்தது.
அதன் பின்னர் அவசரகால சட்டம்.
இந்த காலத்தில் ஒருவர் ஒன்றரை ஆண்டுகள் தடுப்பில் தடுத்து விசாரணைகளை நடத்த முடியும் என்பது எனக்கு தெரியும்.
அண்மையில் இந்த சட்டம் ஒரு ஆண்டுகளாக மாற்றப்பட்டுள்ளது.
எனினும் அந்த தொலைபேசி அழைப்பிற்கு நான் யதார்த்தமாக ஒன்றரை ஆண்டுகளின் பின்னர் என பதில் தெரிவித்தேன்.
இதில் நான் ஆழமாக சிந்திக்கவில்லை.
இவரை ஒன்றரை வருடங்கள் கைது செய்து தடுப்பில் வைத்திருப்பேன் என நான் வேண்டுமென்று கூறவில்லை.
சாதாரணமான அறிவின் படி எம்மால் அதனை தெரிந்து கொள்ள முடிந்தது.
அத்துடன் எமது புலனாய்வு துறையினருக்கு அப்போதே ஓரளவு உறுதியான தகவல்கள் வந்துவிட்டது.
அதைவைத்தே கூறினேன்.
எமக்கு கிடைத்த தகவலின்படி இந்த நபர் குறித்த அமைப்புடன் தொடர்பில் உள்ளார் என்று நாம் அறிந்திருந்தோம்.
புலனாய்வு துறையும் அதனை எமக்கு உறுதிப்படுத்தியிருந்தது.
இந்த பயங்கரவாதம் என்பது சர்வதேச பயங்கரவாதமாகும்.
அதற்கே நாம் முகங்கொடுத்து வருகின்றோம்.
தெரியாத எதிரியோடு நாம் போராடிக்கொண்டுள்ளோம்.
இந்த பயங்கரவாத தாக்குதல் இதற்கு முன்னர் இருந்த பயங்கரவாத தாக்குதலை விட மாறுபட்ட ஒன்றாகும்.
இப்போது இந்த பயங்கரவாதத்தை கட்டுப்படுத்தியுள்ளோம்.
முப்படை மற்றும் பொலிஸ் இணைந்து இந்த பயங்கரவதத்தை தடுக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றோம்.
ஆனால் இந்த பயங்கரவாதம் முடிந்துவிட்டது என்ற வார்த்தையை எம்மால் கூற முடியாது.
எவ்வாறு இருப்பினும் இறுதியை பார்க்கும் வரையில் போராடிக் கொன்றுள்ளோம்.
அவசரகால சட்டம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஆகவே தொடர்ந்தும் கைதுகளை மேற்கொண்டு விசாரணைகளை நடத்த எமக்கு அதிகாரம் உள்ளது.
இதற்கு பின்னர் அரசாங்கமாக இணைந்து பேச்சுவார்த்தைகளை நடத்தி அடுத்த கட்டத்தை ஆராய வேண்டும்.
முன்னர் இருந்த நிலைமையை விட இப்போது முப்படை மற்றும் பொலிஸ் இடையிலான தொடர்பு அதிகரித்துள்ளது.
பாதுகாப்பு செயலாளர் ஒருவராக முன்னாள் இராணுவத்தளபதி ஒருவரை நியமித்துள்ள காரணத்தினாலும், புதிய புலனாய்வு அதிகாரி சி.என்.ஐ ஒருவரும் நியமிக்கப்பட்டுள்ளதாலும் நெருக்கம் அதிகரித்துள்ளது.
அனைவரும் ஒன்றாக இணைந்து பேச முடிகின்றது.
ஒவ்வொரு வாரமும் பாதுகாப்புக்கூட்டம் புலனாய்வு மீளாய்வுக் கூட்டங்கள் இடம்பெற்று வருகின்றது.
அதுவும் சர்வதேச நாடுகளுடன் உள்ள தொடர்பும் இந்தியாவின் ஒத்துழைப்பும் எமக்கு பலமாக இன்று அமைந்துள்ளது.
பீல்ட் மார்சல் சரத் பொன்சேகாவிடம் இருந்த அணி இன்று இல்லை.
யுத்தத்தை ஆரம்பித்தத்தைப் போல அல்லது முடிக்கும் போது மிகவும் பலமாகவும் சர்வதேசத்தினால் ஏற்றுகொள்ளக்கூடிய வகையிலும், அத்துடன் பயங்கரவாதத்தை முழுமையாக தோற்கடிக்கும் வகையில் எமது புலனாய்வுத்துறை செயற்பட்டது.
பின்னர் கடந்த பத்து ஆண்டுகளில் சில பின்னடைவுகள் இருக்கலாம்.
ஆனால் எவ்வாறு இருப்பினும் மீண்டும் ஒன்றிணைந்து பலமாக எமது பாதுகாப்பு மற்றும் புலனாய்வு துறைகளை கட்டியெழுப்ப வேண்டிய தேவையே எமக்கு உள்ளது.
ஒரு சிலர் கைதுசெய்யப்பட்டதால் அல்லது நீக்கப்பட்டதால் புலனாய்வுத்துறை பலவீனமாக மாறும் என நான் நினைக்கவில்லை.
இதற்கு மாற்றீடுகள் கண்டறியப்பட வேண்டும்.
கைது செய்யப்பட்ட நபர்கள் இறந்திருந்தால் என்ன செய்வது. புலனாய்வு துறையினர் இறந்துள்ளனர்.
அதனால் புலனாய்வு வீழ்ச்சி கண்டுள்ளது என கூற முடியாது.
ஆனால் இன்று அச்சுறுத்தல் நிலைமைகள் குறைவாகவே உள்ளது.
குறிப்பாக சாய்ந்தமருது சம்பவத்தின் பின்னர் நிலைமைகளை கட்டுபடுத்த முடிந்தது.
எனினும் 100 வீதம் கட்டுப்பாட்டில் உள்ளது என கூற முடியாது.
ஆனால் அதிகமாக நிலைமைகள் எமது கட்டுபாட்டில் தான் உள்ளது.
வீதமாக கூறுவதை விட அவசரமாக ஏதும் நடக்கும் என்ற அச்சுறுத்தல் நீங்கியுள்ளது.
இந்த நபர்கள் மற்றும் ஆயுதங்கள் கைப்பட்டரப்பட்ட பின்னர் இந்த நிலைமை நீங்கியுள்ளது.
தாக்குதலுக்கு கால எல்லை இல்லை என்பதை நான் ஏற்றுக் கொள்கின்றேன்.
நீண்ட கால திட்டங்களில் இது நடக்கலாம்.
இனியும் எவருக்கும் தேவை இருப்பின் மீண்டும் தாக்குதல் நடக்கலாம்.
அதனால் தான் தேடுதலில் தொடர்ந்தும் இராணுவத்தை ஈடுபடுத்தி வைத்துள்ளோம்.
பலப்படுதியும் உள்ளோம்.
ஆனால் இந்த பயங்கரவாதம் நூறு வீதம் முடிவுக்கு வந்துவிட்டது என நாம் கூற முடியாது.
இந்த அச்சுறுத்தல் இன்னமும் உள்ளது.
விடுதலைப்புலிகளைகூட நாம் இன்னமும் தேடிக்கொண்டுதான் உள்ளோம்.
அவர்களும் இன்றும் சில சில புலம்பெயர் அமைப்புகளுடன் இணைந்து செயப்பட்டு வருகின்றனர்.
ஆகவே இராணுவமாக நாம் இதனை கருத்திற்கொள்ள வேண்டும்.
விடுதலைப்புலிகளை பொறுத்தவரை அந்த அமைப்பின் தலைமைத்துவம் அழிக்கப்பட்ட பின்னர், ஒரு சில தலைவர்கள் சரணடைந்த பின்னரும், மேலும் பலர் சரணடைந்த பின்னர் அந்த அமைப்பு அப்படியே வீழ்ச்சிகண்டுவிட்டது.
ஆனால் இது அவ்வாறு அல்ல.
என குறிப்பிட்டுள்ளார்.

இந்த கேள்விகளின் பின்னர், ஊடகங்களை நிராகரித்து, இராணுவத் தளபதி மகேஷ் சேனாநாயக்கவிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இராணுவத் தளபதியின் வாக்குமூலத்தை அடுத்து, பிற்பகல் 3.00 மணிக்கு, முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் சென்ற நிலையில், அவசர கூட்டம் ஒன்று இருப்பதன் காரணமாக, எதிர்வரும் 28 ஆம் திகதி அவரிடம் வாக்குமூலம் பதிவு செய்ய, பாராளுமன்ற தெரிவுக்குழு தீர்மானித்துள்ளது.
அதனையடுத்து முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன், அங்கிருந்து வெளியேறினார். (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!