கல்வி அமைச்சின் சுற்றுநிருபங்களுக்கு அமைய பாடசாலை மண்டத்தில் இடம்பெறும் மாணவ பாராளுமன்ற தேர்தல் சகல பாடசாலைகளில் இடம்பெற்று வருகின்றன.
இதற்கமைவாக திருக்கோவில் கல்வி வலயத்திற்குட்பட்ட அக்கரைப்பற்று ஸ்ரீ இராமகிருஷ்ண மகாவித்தியாலயத்தில் 90 உறுப்பினர்களை தெரிவு செய்யும் மாணவ பாராளுமன்ற தேர்தல் இன்று(26) இடம்பெற்றது.
கடந்த 2017 ஆம் ஆண்டு தெரிவு செய்யப்பட்ட முதலாவது பாராளுமன்றத்தின் பதவிக்காலம் இவ்வருடத்துடன் முடிவுறும் நிலையில் எதிர்வரும் இரு வருடங்களுக்கான பாராளுமன்ற உறுப்பினர் தெரிவானது மாணவர்களின் பெரும் ஆதரவிற்கும் எதிர்பார்ப்பிற்கும் மத்தியில் நடைபெற்றது.
பாடசாலையின் அதிபர் டேவிட் அமிர்தலிங்கம் தலைமையில் இடம்பெற்ற மாணவ பாராளுமன்ற தேர்தலில் தேர்தல் மேற்பார்வை அதிகாரிகளாக பிரதி அதிபர்களும் தேர்தல் அதிகாரிகளாக ஆசிரியர்களும் கடமையாற்றினர்.
பாடசாலை மட்டத்தில் இரண்டாவது தடவையாக நடைபெறும் இத்தேர்தலில் வாக்களிக்க 752 மாணவர்கள் தகுதி பெற்றிருந்தனர்.
6ஆம் தரம் தொடக்கம் 9 ஆம் தரம் வரையிலான மாணவர்கள்; ஒரு பிரிவாகவும் 10ஆம் தரம் தொடக்கம் 13ஆம் தரம் வரையிலான மாணவர்கள் மற்றுமொரு பிரிவாகவும் பிரிக்கப்பட்டு இரு கட்டங்களாக இடம்பெற்ற இத்தேர்;தலில் 150 மாணவர்கள்; போட்டியிடுவதுடன் 90 பேர் இன்று உறுப்பினர்களாக தெரிவு செய்யப்படவுள்ளனர்.
தெரிவு செய்யப்படும் 90 பேரில் சபாநாயகர் ஒருவரின் தெரிவும் 10 அமைச்சர்களும் தெரிவு செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பாடசாலைகளினூடாக மாணவர்களிடையே ஜனநாயக அரசியல் பழக்க வழக்கங்களை உருவாக்கல் மற்றும் அதனை தெளிவுபடுத்தல் தேர்தல் தொடர்பான விழிப்புணர்வையும் ஏற்படுத்தல் மற்றும் ஜனநாயக தலைமைத்துவ பண்பினை மாணவர்களிடம் உருவாக்கும் நோக்குடன் மாணவ பாராளுமன்ற தேர்தல் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.