19ஆவது திருத்தத்தால் பாதிப்பு!

19ஆவது திருத்தத்தினால் நாட்டினுள் பாரிய நெருக்கடிகள் காணப்படுவதாகவும், அதனால் ஆட்சி பிளவடையக்கூடிய நிலைமை காணப்படுவதாகவும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

கொழும்பிலுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் உரையாற்றும்போதே தயாசிறி ஜயசேகர இவ்வாறு கூறினார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை ஆட்சி பீடமேற்றி, ஐக்கிய தேசியக் கட்சி அவரை ஏமாற்றமடையச் செய்துவிட்டது.
ஏகாதிபத்தியத்தை ஒழிக்க வேண்டுமென, 19ஆவது திருத்தம் கொண்டுவரப்பட்டாலும், இதன் மூலம் நாடு அராஜக பாதையில் பயணிக்கும் அபாயம் காணப்படுகின்றது.

அண்மையில் கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, 18ஆவது மற்றும் 19ஆவது திருத்தச் சட்டங்களை இரத்து செய்ய வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த இரண்டு திருத்தச் சட்டங்களும் இருந்திருக்காவிட்டால் கடந்த நான்கரை வருட ஆட்சிக்காலம் வெற்றிக்காலமாக மாறியிருக்கும் என்று குறிப்பிட்டிருந்தார்.

தனக்கும் பிரதமர் ரணிலுக்கும் இடையே முறுகல் நிலை ஏற்பட இந்த இரண்டு திருத்தங்களுமே காரணம் என்றும் தெரிவித்திருந்தார்.

19ஆவது திருத்தத்தைக் கொண்டுவந்து நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறையை இல்லாதொழிப்பதாகக்கூறி ஆட்சிக்குவந்த அரச தலைவர் மைத்திரிபால சிறிசேனவின் இந்தக் கருத்தானது, அவரை ஆட்சிபீடத்திற்கு அமர்த்திய பிரிவினரின் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளானது.

19ஆவது திருத்தத்தில் நாடு அராஜகமடையும் என்று ஜனாதிபதியே கூறியுள்ளார்.

அரசியலமைப்புச் சபை ஊடாக செய்யப்பட்ட நியமனங்கள் குறித்து பல சர்ச்சைகள் ஏற்பட்டன.

உதாரணமாக நீதியரசர்களை நியமிக்கும்போது அதன் அடிப்படைகள் என்ன? நிர்ணயங்கள் என்ன? நீதியரசர் ஒருவர் கீழிருந்து மேலே வரும்போது அவருடைய அனுபவங்கள் என்ன? திறமைகள் என்ன என்பது குறித்த அடிப்படை விடயங்களை அரசியலமைப்புச் சபை தெரிந்து வைத்திருக்கவில்லை.

ஆகவேதான் ஜனாதிபதி அனுப்பிய சிலருடைய பெயர்கள் அரசியலமைப்புச் சபையிலிருந்து இரண்டு, மூன்று தடவைகள் நிராகரிக்கப்பட்டன.

அதேபோல பிரதமரின் ஆலோசனைகளை பெற்று அமைச்சரவை மாற்றங்களை செய்ய வேண்டும் என்கிற பிரிவும் 19ஆவது திருத்தத்தில் கூறப்பட்டுள்ளது.
ஏன் இப்படியான நிலைமையை ஏற்படுத்திக்கொண்டார்கள்.

அரசியலமைப்பு என்பது மக்களுக்கு மிகத் தெளிவாக விளங்கிக்கொள்ளக் கூடியவாறாக இருக்க வேண்டும்.

ஆனால் 19ஆவது திருத்தத்தில் உள்ளவற்றை இரவில் படித்துவிட்டு காலையில் மீண்டும் அதனை படித்தால் பல கேள்விகள் எழும்.

இதேபோன்று ஜனாதிபதியின் சகல அதிகாரங்களையும் நீக்கிவிட்டு அவரை வெறுமனே ஒரு ஜனாதிபதியாக வைத்திருக்கின்ற ஒரு சூழ்ச்சியே இந்த 19ஆவது திருத்தத்தில் காணப்படுகிறது.

பொதுமக்கள் கருத்துக் கணிப்பிற்கு செல்கின்ற சில பிரிவுகள் இதில் காணப்படுவதே உண்மை.

நாடாளுமன்றத்தை கலைப்பதற்கான அதிகாரம் ஜனாதிபதிக்கு இருப்பதாக தெரிந்தே ஒக்டோபரில் ஜனாதிபதி அதனைக் கலைத்தார்.

70ஆவது பிரிவில் அது கூறப்பட்டுள்ள நிலையில் அதனை பொது மக்கள் கணிப்பிற்கு விடவேண்டும் என்கிற பிரிவையும் திருட்டுத்தனமாக 19ஆவது திருத்தத்தில் 33ஆவது பிரிவில் சேர்த்துள்ளனர்.

அரசியலமைப்பை திருத்துவதற்கான சந்தர்ப்பம் இதுவல்ல.

ஜனாதிபதி முறைமை பற்றிய விவகாரத்தில் மாகாண சபைகளுக்கு அதிகாரங்களை பரவலாக்கல் குறித்து 13அவது திருத்தத்தில் உள்ள விடயங்களுக்கு அமைய, நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறைமையை தக்கவைத்துக்கொள்ள வேண்டும் என்கிற நிலைப்பாட்டில் உள்ளோம்.

ஆனால் ஜனாதிபதி முறைமைக்குள் பிரதமருக்கு அதிகாரங்களை வழங்குகின்ற அரசியலமைப்பை உருவாக்க முயற்சித்தமையே பிரச்சினைக்கான காரணமாகும்.

அது எப்போதுதே உருவாக்க முடியாத ஒன்றாகும்.

இந்த திரிபுபடுத்தப்பட்ட பிரச்சினையே 19ஆவது திருத்தம் கொண்டிருக்கிறது. (நி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!