மேற்கிந்திய தீவுகள் அணி 25 ஓட்டங்களால் வெற்றி!

ஒஷேன் தோமஸின் அதிரடி பந்துவீச்சின் உதவியோடு இலங்கைக்கு எதிரான முதலாவது டி-20 போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி 25 ஓட்டங்களால் வெற்றியீட்டியது.

பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் சவாலான வெற்றி இலக்கை நோக்கி துடுப்பாடிய இலங்கை அணியின் முன் வரிசையை ஒஷேன் தோமஸ் சாய்த்த நிலையில் குசல் பெரேரா அபாரமாக துடுப்பெடுத்தாடி ஒரு போராட்டத்தை வெளிக்காட்டிய போதும் வெற்றி இலக்கை நெருங்க முடியாமல்போனது.

இந்த தோல்வியின் மூலம் இலங்கை அணி டி-20 போட்டிகளில் தொடர்ச்சியாக தனது 6ஆவது தோல்வியை சந்தித்தது. 2018 ஆம் ஆண்டில் லசித் மாலிங்க தலைமை பெறுப்பை மீண்டும் ஏற்ற பின் அவரது தலைமையில் இலங்கை அணி பெறும் 12 ஆவது தோல்வி இதுவாகும். இந்தக் காலப்பிரிவில் அவரின் தலைமையில் இலங்கை அணி ஒரு போட்டியிலேயே வெற்றி பெற்றமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் போட்டியின் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்த மேற்கிந்திய தீவுகள் அணி சார்பில் லென்ட்ல் சிம்மன்ஸ் வேகமான ஆரம்பம் ஒன்றை பெற்றுக்கொடுத்தார்.

பிரன்டன் கிங்குடன் சேர்ந்து அவர் ஆரம்ப விக்கெட்டுக்கு 74 ஓட்டங்களை பகிர்ந்துகொண்டார். இதன்போது 25 பந்துகளில் 5 பௌண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸருடன் 33 ஓட்டங்களை பெற்றிருந்த பிரன்டன் கிங்கின் விக்கெட்டை லக்ஷான் சந்தகனினால் வீழ்த்த முடிந்தது.

தொடந்து வந்த நிகொலஸ் பூரன் 14 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தபோதும் அன்ட்ரே ரசல் அதிரடியாக பந்துகளை சிக்ஸருக்கு விளாசி ஓட்டங்களை வேகமாக சேர்த்தார்.

டி20 உலகக் கிண்ணத்தை நோக்காகக் கொண்டு தேசிய அணிக்கு அழைக்கப்பட்டிருக்கும் நட்சத்திர சகலதுறை வீரரான அன்ட்ரே ரசல் 14 பந்துகளில் 2 பௌண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 35 ஓட்டங்களை விளாசிய நிலையில் லசித் மாலிங்கவின் பந்துக்கு போல்ட் முறையில் ஆட்டமிழந்தார்.

அன்ட்ரே ரசல் கடைசியாக 2018 ஆம் ஆண்டே மேற்கிந்திய தீவுகளுக்காக டி20 சர்வதேச போட்டியில் விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்து வந்த அணித்தலைவர் கைரன் பொலார்ட் அதிரடி ஆட்டத்தை தொடர்ந்தார். தனது 500 ஆவது டி20 போட்டியில் விளையாடிய பொலார்ட் 15 பந்துகளில் 3 பௌண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 34 ஓட்டங்களை பெற்றார்.

மறுமுனையில் ஆட்டமிழக்காது கடைசி வரை இருந்த சிமன்ஸ் டி20 போட்டிகளில் தனது 17 ஆவது அரைச்சதத்தை பெற்றார். 51 பந்துகளுக்கு முகம்கொடுத்த அவர் 67 ஓட்டங்களை பெற்று இலங்கை அணிக்கு சவாலான வெற்றி இலக்கை நிர்ணயிக்க உதவினார்.

இறுதியில் மேற்கிந்திய தீவுகள் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 196 ஓட்டங்களை பெற்றது. சற்று மந்தமான ஆடுகளத்தை கொண்ட பல்லேகல மைதானத்தில் மேற்கிந்திய தீவுகள் அணி பெற்ற இந்த ஓட்டங்களானது டி20 போட்டிகளில் அந்த அணி இலங்கைக்கு எதிராக பெற்ற அதிகூடிய ஓட்டங்களாகும்.

2015 ஆம் ஆண்டு இதே பல்லேகல மைதானத்தில் இலங்கைக்கு எதிராக சகல விக்கெட்டுகளையும் இழந்து பெற்ற 185 ஓட்டங்களே முன்னர் அதிகபட்ச ஓட்டங்களாக இருந்தது.

சவாலான இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாட களமிறங்கிய இலங்கை அணிக்கு ஆரம்பம் ஏமாற்றமாக இருந்தது. ஆரம்ப துடுப்பாட்ட வீரர் அவிஷ்க பெர்னாண்டோ முதல் பந்துக்கே பௌண்டரி விளாசிய நிலையில் 7 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

குறிப்பாக வலதுகை வேகப்பந்துவீச்சாளர் ஒஷேன் தோமஸ் வீசிய இரண்டாவது ஓவரில் இலங்கை அணி மூன்று விக்கெட்டுகளை பறிகொடுத்தது. மூன்றாவது பந்தில் அவிஷ்க பெர்னாண்டோ ஆட்டமிழக்க அடுத்த பந்திலேயே ஷெஹான் ஜயசூரிய ஓட்டமேதுமின்றி ஆட்டமிழந்தார்.

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக ஒருநாள் தொடரில் சிறப்பாக துடுப்பெடுத்தாடிய குசல் மெண்டிஸ் வந்த வேகத்தில் ஓட்டமேதுமின்றி ஆட்டமிழந்தார்.

இந்நிலையில் அஞ்சலோ மெதிவ்ஸ் 10 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்ததோடு தசுன் சானக்கவினால் 2 ஓட்டங்களையே பெற முடிந்தது. இதனால் இலங்கை அணி 56 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்தது தடுமாறியது.

நேற்று திருமண பந்தத்தில் இணைந்து புது மணமகனாக இன்று (04) களமிறங்கிய ஆரம்ப துடுப்பாட்ட வீரர் குசல் பெரேரா அபார ஆட்டம் ஒன்றை வெளிப்படுத்தினார். 6ஆவது விக்கெட்டுக்காக வனிந்து ஹசரங்கவுடன் ஜோடி சேர்ந்த அவர் 87 ஓட்டங்களை பகிர்ந்துகொண்டார். இருவரும் இரு முனைகளில் இருந்தும் பௌண்டரிகள், சிக்ஸர்களை விளாச இலங்கை அணி வெற்றியை நெருங்கியது.

எனினும் 34 பந்துகளில் 44 ஓட்டங்களை பெற்ற வனிந்து ஹசரங்க ஆட்டமிழந்த பின் இலங்கை பின்னடைவை சந்தித்தது. குசல் பெரேரா தொடர்ந்து சிறப்பாக துடுப்பாடியபோதும் அன்ட்ரே ரசலின் பந்துக்கு போல்ட் முறையில் ஆட்டமிழந்தார்.

தனது 100ஆவது டி-20 போட்டியில் களமிறங்கிய குசல் பெரேரா 38 பந்துகளில் 6 பௌண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 66 ஓட்டங்களை பெற்றார்.

கொரோனாவினால் இலங்கையில் கைகுலுக்க மறுக்கும் இங்கிலாந்து அணி

பின் வரிசை துடுப்பாட்ட வீரர்கள் தேவைப்படும் ஓட்ட வேகத்தை பெற அதிரடியாக ஆட முயன்று விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். இதனால் இலங்கை அணி 19.1 ஓவர்களில் 171 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது.

இலங்கை அணியில் ஆரம்ப துடுப்பாட்ட வரிசையை சாய்த்த ஒஷேன் தோமஸ் 3 ஓவர்களுக்கு 28 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை பதம்பார்த்து ஆட்ட நாயகன் விருதை வென்றார்.

டி-20 தொடரில் 1-0 என மேற்கிந்திய தீவுகள் முன்னிலை பெற்றுள்ள நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது மற்றும் இறுதி டி-20 போட்டி இதே பல்லேகல மைதானத்தில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (06) நடைபெறவுள்ளது. (se)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!