கோட்டாவின் ஆட்சிக் காலம் சிறந்த ஆட்சி காலமாக அமையும் – மகாசங்கம்!!

நாட்டின் மீதும், சமயத்தின் மீதும் பற்றுள்ள தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில் நிச்சயமாக நாட்டில் சமய, சமூக, எழுச்சி உருவாகுமென மகாசங்கத்தினர் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

மூன்று மகா நிக்காயாக்களின் மகா சங்கத்தினரின் தலைமையில் நேற்று பிற்பகல் கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற அகில இலங்கை சாசன பாதுகாப்பு சபையின் தேசிய மாநாட்டிலேயே இவ்வாறு நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

இந்நிகழ்வில், விசேட அனுசாசன உரையாற்றிய அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்கர் சங்கைக்குரிய வரக்காகொட ஸ்ரீ ஞானரத்தன தேரர், அறநெறி கல்வியின் வளர்ச்சிக்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதியிடம் வேண்டுகோள் விடுத்தார்.

கடந்த காலத்தில் பல தடவைகள் இவ்வேண்டுகோள் விடுக்கப்பட்டபோதும் போதுமான நடவடிக்கைகளை எடுக்கப்படவில்லை என சுட்டிக்காட்டிய தேரர், ஒழுக்கநெறி கொண்ட நாடு மற்றும் எதிர்கால சந்ததியினரை கட்டியெழுப்புவதே தனது நோக்கமாகக்கொண்ட தற்போதைய
ஜனாதிபதி, அதற்காக தனது பங்களிப்பை வழங்குவார் என நம்பிக்கை வெளியிட்டார்.

புத்தசாசனத்தின் முன்னேற்றம் மற்றும் எழுச்சிக்காகவே உருவாக்கப்பட்ட அகில இலங்கை சாசனப் பாதுகாப்பு சபை மிக முக்கிய பௌத்த அமைப்பாகும்.

பிரதேச சாசன பாதுகாப்பு சபைகள் 332 இனை கொண்டமைந்துள்ளதோடு அவை பௌத்த அறநெறிப் பாடசாலை மாணவர்களின் திறமைகளை பாராட்டுதல், அறநெறிப் பாடசாலை தரப் பரீட்சைகள், அறநெறிப் பாடசாலை ஆசிரியர்களுக்கு மருத்துவ உதவிகளை வழங்குதல், பின்தங்கிய பிரதேச பாடசாலை மாணவர்களுக்கு புலமைப்பரிசில்களை வழங்குதல் உள்ளிட்ட பல்வேறுவித வேலைத்திட்டங்களை முன்னெடுத்துள்ளது.

அறநெறிப் பாடசாலை மற்றும் விகாரைகளின் அபிவிருத்திக்காக செயற்படுத்தப்படும் செயற்திட்டங்களை பாராட்டும்முகமாக இம்முறை இம்மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அகில இலங்கை சாசன பாதுகாப்பு சபைக்காக பாரிய பங்களிப்பினை வழங்கிய தேரர்களுக்கு ஜனாதிபதி தனது பாராட்டினையும் கௌரவத்தினையும் தெரிவித்தார்.

மல்வத்தை பீடத்தின் அனுநாயக்க தேரர் சங்கைக்குரிய திம்புல்கும்புரே விமலதம்ம தேரர், இலங்கை அமரபுர மகா நிக்காயவின் மகாநாயக்க தேரர் அக்கமகா பண்டித சங்கைக்குரிய கொட்டுகொட தம்மாவாச தேரர், சங்கைக்குரிய மாத்தலே குசலதம்ம தேரர், சாஸ்திரபதி
சங்கைக்குரிய கோணதுவே குணானந்தா தேரர், கலாநிதி சங்கைக்குரிய தும்புல்லே சீலக்கந்த தேரர், மகாசங்கத்தினர் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர். (சி)

Recommended For You

About the Author: News Editor

error: Content is protected !!