19 ஆவது திருத்தம் தொடர்பில் ஜனாதிபதியின் கருத்துக்கள் பொருத்தமற்றவை : ஜயம்பதி விக்ரமரட்ண

அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தத்தின் மூல வரைபை, எவ்வித மாற்றங்களுமின்றி முழுமையாக நடைமுறைப்படுத்திருந்தால், எவ்வித அரசியல் நெருக்கடிகளும் அரசியலமைப்பை மையப்படுத்தி ஏற்பட்டிருக்காது என, ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தற்போது குறிப்பிடும் கருத்துக்கள் பொருத்தமற்றமை என, பாராளுமன்ற உறுப்பினரும் அரசியலமைப்பு பேரவை உறுப்பினருமான ஜயம்பதி விக்ரமரட்ண தெரிவித்துள்ளார்.

நாடு முன்னேற்றமடைய வேண்டுமாயின் 19 ஆவது திருத்தத்தை முழுமையாக இரத்துச் செய்ய வேண்டும் என்ற தேவை கிடையாது.

மாறாக நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி, கொடுத்த வாக்குறுதிக்கு அமைய, ஜனாதிபதி முறைமையை இரத்துச் செய்ய வேண்டும்.

அப்போதே ஒரு மக்களின் இறையாண்மை மதிக்கப்பட்டு, ஒரு தேசிய கொள்கையின் கீழ் அனைவரும் உட்படுவார்கள்.

அரசியலமைப்பின் 18 ஆவது திருத்தம் எந்த நோக்கத்திற்கு உருவாக்கப்பட்டது என்பதை ஜனாதிபதி தெளிவுப்படுத்தியுள்ளமை வரவேற்கத்தக்கது.

அரசியலமைப்பு விடயத்தில் அரசியல் தேவைகளையும், பக்கச்சார்பற்ற கருத்துக்களை துறந்து செயற்படுவதல் அவசியமாகும்.

2015 ஆம் ஆண்டு ஆட்சி மாற்றம், பல்வேறு தரப்பினரின் எதிர்பார்ப்பிற்கு அமைய பாரிய போராட்டத்தின் மத்தியில் உருவாக்கப்பட்டது.

ஜனநாயகத்திற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தை முன்னிலைப்படுத்தியே, அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தம் உருவாக்கப்பட்டது.

அரசியல் தலையீடுகள் இல்லாமல் சுயாதீன ஆணைக்குழுக்கள் உருவாக்கப்பட்டமையின் பயனை, தற்போது அனைவரும் பெற்றுக் கொண்டுள்ளோம்.

இதனை ஒருபோதும் மறுக்க முடியாது, நீதித்துறையின் சுயாதீன தன்மையே இதற்கு சிறந்ததொரு எடுத்துக்காட்டு. அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தத்தின் மூல வரைபை, முழுமையாக எவ்வித மாற்றங்களும் இன்றி நடைமுறைப்படுத்திருந்தால், அரசியலமைப்பை மையப்படுத்தி எவ்வித நெருக்கடிகளும் ஏற்பட்டிருக்காது,எவரும் அரசியலமைப்பை விமர்சித்திருக்க மாட்டார்கள்.

மூல வரைபில் மாற்றங்கள் ஏற்படுவதற்கு பிரதான காரணம், அரசியல் அதிகாரங்கள் ஒரு தரப்பினருக்கு சென்று விட கூடாது என, ஜனாதிபதி தலைமையிலான சுதந்திர கட்சியும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியும் எதிர்த்தமையே.

அரசியல் அதிகாரங்கள் அனைத்தும், ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிற்கு செல்கின்றது.

ஆகவே, 19 ஆவது திருத்தத்தின் மூல வரைபில் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும் என்று குறிப்பிட்டவர்கள், அமைச்சரவைக்கு கூட்டுப் பொறுப்பு சொல்ல வேண்டிய பிரதமருக்கு, அரசியல் அதிகாரங்கள் செல்கின்றது என்பதை கவனத்தில் கொள்ளவில்லை,ஒரு தனி நபர் மீதே அனைவரும் செல்வாக்கு செலுத்தினார்கள்.

அரசியலமைப்பை உருவாக்குவதற்கு பாராளுமன்றத்தில் பெரும்பான்மை ஆதரவு தேவை என்பதாலும், தேசிய அரசாங்கம் என்ற ரீதியில், ஜனாதிபதியின் தரப்பினரது கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்பதனாலும், அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தத்தின் மூல வரையில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டது, இதுவே பல விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது.

ஜனாதிபதி முறைமைமை முழுமையாக இரத்துச் செய்வதனால், பாராளுமன்றம் பலம் பெற்று மக்களாணை மதிக்கப்படும்.
அப்போது அனைவரும் ஒரு தேசிய கொள்கையின் கீழ் செயற்படுவார்கள்.
என அரசியலமைப்பு பேரவை உறுப்பினர் ஜயம்பதி விக்ரமரட்ண குறிப்பிட்டுள்ளார்.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!