அராலி-குறிகாட்டுவான் வீதிப்புனரமைப்பு கிடப்பில்:பொதுமக்கள் விசனம்

யாழ்ப்பாணத்தில், அராலி-குறிகாட்டுவான் வீதி புனரமைப்பு கிடப்பில் காணப்படுவதாக தீவக மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

இவ்விடயம் தொடர்பில் அரசியல்வாதிகளும் வாய்மூடி மௌனமாக இருப்பதாக அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

அராலித் துறையிலிருந்து குறிகாட்டுவான் வரையிலான வீதிப்புனரமைப்பு கிடப்பில் போடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கும் அப்பகுதி மக்கள்,
2018ம் ஆண்டு ஆவணி மாதம் வேலைகள் ஆரம்பிப்படுமெனவும், இதற்கான மதிப்பீட்டுப் பணிகள் முடிவடைந்து விட்டதாவும் யாழ் மாவட்டச் செயலகத்தில் நடைபெற்ற ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் திட்டப் பணிப்பாளர் தெரிவித்திருந்தார்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் 2018ஆம் ஆண்டு இடம்பெற்ற இவ்ஒருங்கிணைப்புக் குழக்கூட்டத்தில், பாராளுமன்ற உறுப்பினர் சிஞானம் சிறிதரனின் கேள்விக்கு திட்டப் பணிப்பாளர் மேற்கண்டவாறு பதிலளித்திருந்தார்.
எனினும், 2018ம் ஆண்டு முடிவடைந்து 2019ம் ஆண்டு ஆவணி மாதம் நெருங்கும் இவ்வேளையும், குறித்த வீதியை அபிவிருத்தி செய்வதற்கான எந்தவித அறிகுறியும் தென்படவில்லை.

இந்நிலையில் இது தொடர்பாக யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரிடம் எமது செய்திச்சேவை வினவியபோது,  இவ்வீதி அபிவிருத்தித் திட்டம் மந்தநிலையில் உள்ளதாக அவர் தெரிவித்தார்.

இந்நிலையில், ஏன் இந்த வீதி அபிவிருத்தி செய்ய தயக்கம் காட்டப்படுகிறது? எனவும், அரச அதிகாரிகளும் தீவகத்தைப் புறக்கணிக்கின்றார்களா? எனவும் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இதனால் வலிகாமம் மேற்குவாழ் மக்களும், தீவக மக்களும் கவலை அடைந்துள்ள நிலையில், வீதி அபிவிருத்தி அதிகாரசபைத் திட்டப் பணிப்பாளர் இதற்கான பதிலை உடனடியாக வழங்வேண்டுமென பிரதேசவாழ் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Recommended For You

About the Author: KUKAN

error: Content is protected !!