ஊடகங்கள் வேண்டாம் என்றார் ஆளுநர். வேண்டும் என்றனர் பா.உறுப்பினர்கள்.

முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக்குழுக் கூட்டத்தில் செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகங்களை வெளியேறுமாறு ஆளுநர் பணித்ததன் காரணமாக கூட்டத்தில் சில நிமிடங்கள் அமைதி இன்மை ஏற்பட்டது.

கூட்டம் ஆரம்பித்த சில மணி நேரங்களில் தனியார் ஊடகங்களை கூட்டம் நடைபெற்ற மண்டபத்திற்கு வெளியே செல்லுமாறு ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் பணித்தார். இதன்போது குறுக்கிட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் இதுவரை காலமும் நடைபெற்ற அபிவிருத்திக்குழுக் கூட்டங்களை முழுமையாக ஊடகங்கள் ஒளிப்பதிவு செய்வது வழமை. எனவே அந்த நடைமுறையினை மாற்ற வேண்டாம் என்றும் அரச ஊடகங்களை அனுமதித்து தனியார் ஊடகங்களை வெளியேற்றுவது தனியார் ஊடகங்களை அவமதிப்பதாக அமையும் என்றும் குறிப்பிட்டார்.

சிவசக்தி ஆனந்தனின் இந்த கருத்தை அடுத்து அவ்வாறாயின் அனைத்து ஊடகங்களையும் வெளியேறுமாறு ஆளுநர் பணித்தார்.

இதற்கு எதிர்ப்பு வெளியிட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறிஸ்கந்தராசா ஊடகங்களை வெளியேற்றுவது பிழையான விடயம் எனவும் அபிவிருத்திக்குழுக் கூட்டத்தில் என்ன விடயங்கள் பேசப்படுகின்றன என்பதை இந்த மாவட்ட மக்கள் அறிந்து கொள்வதனை தடுப்பதாக அமையும் எனவே ஊடகங்கள் செய்தியினை ஒளிபரப்பு செய்ய அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

மீண்டும் கருத்து வெளியிட்ட பா.உ சிவசக்தி ஆனந்தன் 19வது திருத்தச்சட்டத்தில் தகவல் அறியும் சட்டம் இருப்பதனை நினைவுபடுத்தி மக்கள் தகவலினை அறிந்து கொள்வது அவர்களின் உரிமை என்று தெரிவித்தபோது

அதற்கு ஆளுநர் சட்டம் என்னவோ இருப்பது உண்மைதான் அதற்காக ஒவ்வொரு விடயங்களையும் விலாவாரியாக தெரிவிக்க வேண்டியது அவசியமா என கேள்வி எழுப்பினார்.?

இதற்கு ஆம் என பதிலளித்த பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன். கட்டாயமாக மக்கள் இந்த அபிவிருத்திக்குழுக் கூட்டத்தில் பேசும் விடயங்கள் அனைத்தினையும் அறிந்து கொள்ள வேண்டும் அதற்காக ஊடகங்கள் முழுமையாக இதனை ஒளிப்பதிவு செய்வது கட்டாயமாக இருத்தல் வேண்டும். நாம் இங்கே அபிவிருத்தி பற்றித்தான் பேசுகின்றோம். எனவே மக்கள் அறிந்து கொள்வது அவசியமானது என்று தெரிவித்தார்.

இதன் பின்னராக அவ்வாறாயின் நீங்கள் கூட்டத்தினை நடாத்துங்கள் நான் பார்த்துக் கொண்டிருக்கின்றேன் என்று தெரிவித்த ஆளுநர் நான் ஊடகங்களுக்கு எதிரானவன் அல்ல எனவும் ஊடகத்தினை விரும்புபவன் என்றும் தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர்களின் எதிர்ப்பினை அடுத்து ஊடகங்கள் செய்தியினை சேகரிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது. இதனையடுத்து கூட்டம் தொடர்ந்து நடைபெற்றது.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!