சம்பினானது கொக்கட்டிச்சோலை காஞ்சிரங்குடா ஜெகன் கழகம்!

மட்டக்களப்பு மாவட்டத்தின் கொக்கட்டிச்சோலை ஈஸ்வரா விளையாட்டுக்கழகம் நடாத்திய 10வது பருவகால  படுவான்சமர் எனும் மாபெரும் உதைபந்தாட்ட இறுதிச் சுற்றுப் போட்டியும் பரிசு வழங்கும் நிகழ்வும் நேற்று பிற்பகல் கொக்கட்டிச்சோலை குமரகுரு விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.

ஈஸ்வரா விளையாட்டுக்கழகத்தின் தலைவர் பி.நீதிதேவன் தலைமையில் நடைபெற்ற இறுதிநிகழ்வில், கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ.மு.கு.சச்சிதானந்தக்குருக்கள், மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன், மண்முனை தென்மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் சி.புஸ்பலிங்கம், கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலய பரிபாலன சபையின் வண்ணக்கர் தலைவர் பூ.சுரேந்திரராசா,  செயலாளர் இ.சாந்தலிங்கம்  உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

கிழக்கு மாகாணத்திலிருந்து 32 அணிகள் பங்குகொண்ட விலகல் முறையில் நடாத்தப்பட்ட உதைப்பந்தாட்டப் போட்டியின் இறுதிப்போட்டிக்கு, காஞ்சிரங்குடா ஜெகன் அணியினரும், பட்டிப்பளை வைரவர் அணியினரும் தெரிவுசெய்யப்பட்டனர்.

இறுதிச் சுற்றில் இவ் இரு அணியினரும் மோதிக்கொண்டதில் 1 : 0 என்ற கோல்  விகிதத்தில்  பட்டிப்பளை வைரவர் அணியை வெற்றிகொண்டு காஞ்சிரங்குடா ஜெகன் அணி வெற்றிபெற்று சம்பியனானது. இதில் மூன்றம் இடத்தினை கரையாக்கந்தீவு காந்தி விளையாட்டுக்கழகம் பெற்றுக்கொண்டது.

கடந்த சனி,ஞாயிறு ஆகிய இரு தினங்களாக   இப் போட்டிகள் நடைபெற்றன.

சிறந்த விளையாட்டு வீரர், சிறந்த பந்துக் காப்பாளர், அதிக கோள்களை உட்செலுத்தியவர், சிறந்த நன்னடத்தை அணி போன்றவற்றிற்கும் நினைவுப்பரிசில்கள் வழங்கப்பட்டதுடன், முதல் மூன்று நிலைகளையும் பெற்ற அணிகளுக்கு பணப்பரிசில்களும், வெற்றிக்கிண்ணங்களும் வழங்கி வைக்கப்பட்டன. (சி)

 

 

Recommended For You

About the Author: Satheesh

error: Content is protected !!