கொரோனா தொடர்பில் உலக சுகாதார நிறுவனம் கருத்து!!

சீனாவில் உருவான கொரோனா வைரஸ் தாக்கம், உலகை அச்சுறுத்தி வரும் நிலையில், தற்போது வரை ஆயிரத்து 483 பேரைக் காவுகொண்டுள்ளது.

அத்துடன் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.

இந்நிலையில், கொரோனா வைரஸானது, சீனாவில் ஆறு தாதியர்களின் உயிரைப் பறித்துள்ளதுடன், ஆயிரத்து 700 ற்கும் அதிகமான மருத்துவ ஊழியர்களைத் தாக்கியுள்ளதாக, பீஜிங் செய்திச் சேவையொன்று தெரிவித்துள்ளது.

இதேவேளை, பாதிக்கப்பட்ட ஆயிரத்து 716 மருத்துவ ஊழியர்களில் ஆயிரத்து 102 பேர் வுஹானிலும், 400 பேர் ஹூபே மாகாணத்தின் வேறு பிராந்தியங்களிலும், கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளதாக, சீனாவின் தேசிய சுகாதார ஆணையகத்தின் பிரதியமைச்சர் ஜெங் யிக்சின் குறிப்பிட்டுள்ளார்.

முகமூடிகள் மற்றும் பாதுகாப்புக் கவசகங்கள் பற்றாக்குறை காரணமாக, மருத்துவ ஊழியர்கள், கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான நோயாளர்களைக் கையாளும் போது, அல்லது அவர்களுக்கு சிகிச்சையளிக்கும் போது இவ்வாறு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த நிலையில், சீனாவை தாண்டி உலகின் மற்ற நாடுகளில் கொரோனா வைரஸ் அதாவது கோவிட் -19 பாதிப்பில் எந்த அதிகரிப்பும் இல்லை என, உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

சர்வதேச அளவில், வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 64 ஆயிரத்து 600 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்று குறித்து, சீனாவில் இருந்து வெளிவரும் தகவல்களில் நம்பிக்கையில்லை என, அமெரிக்க வெள்ளை மாளிகையின் பொருளியல் ஆலோசகர் லாரி குட்லோ குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்கா வழங்க முன்வந்த உதவிகளை, சீனா தொடர்ந்து ஏற்க மறுப்பதையும், அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பாதிக்கப்பட்டோர் குறித்த துல்லியமான விவரம் இல்லை எனவும், வைரஸ் தொற்று பரவுவதை சீனா கையாளும் முறையிலும் வெளிப்படைத்தன்மை இல்லை எனவும், அமெரிக்க பொருளியல் ஆலோசகர் லாரி குட்லோ குற்றம் சுமத்தியுள்ளார். (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!