நான் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர் மாத்திரம் அல்ல – தொண்டமான்!!

நுவரெலியா டயகம நெட்போன் பிரதேச பாடசாலை கட்டடம், இன்று மாணவர்களின் பாவனைக்கு கையளிக்கப்பட்டுள்ளது.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும், சமூக வலுவூட்டல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான், பிரதம அதிதியாக பங்கேற்று, கட்டடத்தை திறந்து வைத்தார்.

நிகழ்வில், முன்னாள் மத்திய மாகாண அமைச்சர் எம்.ரமேஷ்வரன், முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினர்கள், ஆசிரியர்கள், அதிபர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

இதன்போது கருத்து தெரிவித்த அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான்…

நுவரெலியா மாவட்டத்தில் ஜனாதிபதி தோல்வியடைந்திருந்தாலும்கூட, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் கோரிக்கையை ஏற்று, சிறுபான்மையின மக்கள் மீதும் மதிப்புள்ளதால் மார்ச் மாதம் முதல் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாட் சம்பளம் ஆயிரம் ரூபாவாக இருக்க வேண்டும் என்ற கட்டளையை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பிறப்பித்தார்.

இதற்கான ஒப்பந்தம் பெப்ரவரி 13 ஆம் திகதி கைச்சாத்திடப்படவிருந்தாலும் சில சரத்துகள் தொழிலாளர்களுக்கு பாதகமாக இருந்ததால் அவற்றில் திருத்தம் மேற்கொள்ளுமாறு பணிப்பு விடுத்தேன். இதன்காரணமாகவே நிகழ்வு ஒத்திவைக்கப்பட்டது.

நான் எங்கும் ஓடி ஒளியவில்லை. இந்தியாவில் இருந்து திரும்பிய கையோடு இது தொடர்பில் வானொலி ஊடாக அறிவிப்பு விடுத்தேன்.

எது எப்படியிருந்தபோதிலும் மார்ச் முதலாம் திகதி முதல் ஆயிரம் ரூபா கிடைப்பது உறுதி.

இந்நிலையில் அடிப்படை சம்பளமாக ஆயிரம் ரூபா வேண்டும் என ஒரு கூட்டம் கிளம்பியுள்ளது.

50 ரூபாவையே வாங்கிக்கொடுக்க முதுகெலும்பற்றவர்களுக்கு ஆயிரம் ரூபா தொடர்பில் கதைப்பதற்கு எவ்வித உரிமையும் கிடையாது.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் உறுப்பினர்கள், ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோருக்கே அது பற்றி கதைக்கும் உரிமை இருக்கின்றது.

ஐக்கிய தேசியக்கட்சி ஆட்சியில் அரசாங்கத்தை தூக்கிப்பிடித்துக்கொண்டு செல்லாக்காசாக இருந்த அந்த ஆறுபேரும் ஆயிரம் ரூபா தொடர்பில் பேசுவதற்கு எவ்வித அருகதையும் கிடையாது.

ஐயா காலத்தில் இருந்து காங்கிரஸ்தான் சம்பள உயர்வை பெற்றுக்கொடுத்தது. எதிர்காலத்திலும் நாம்தான் வாங்கிக்கொடுப்போம். அதில் துளியளவும் சந்தேகம் கிடையாது.

கல்வி மற்றும் அபிவிருத்திகள் மலையகத்தில் கல்வித்துறையை கட்டியெழுப்புவதற்கு மறைந்த ஐயா சௌமியமூர்த்தி தொண்டமானும், காங்கிரசுமே தீவிரமாக செயற்பட்டது. இது அன்றிருந்த மக்களுக்கு தெரியும். ஆனால் இன்று சிலர் மாறுபட்ட கோணத்தில் கருத்து வெளியிட்டுவருகின்றனர்.

கல்வி மட்டுமல்ல எல்லாத்துறைகளிலும் எம் சமூகம் இன்று முன்னேறியுள்ளது. அரச துறை மற்றும் தனியார் நிறுவனங்களில் எம் பிள்ளைகள் தொழில் புரிகின்றனர். இது முன்னேற்றகரமான மாற்றமாகும்.

அதேபோல் மூன்று மாதங்கள் கடந்தும் இந்த ஆட்சியில் ஒன்னும் நடக்கவில்லை என சிலர் கூறுகின்றனர். விமர்சனங்களை முன்வைப்பதற்கு முன்னர் அதன் உண்மை தன்மை பற்றி அறிந்துகொள்வதே சிறப்பு. என தெரிவித்தார்.(சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!