கொவிட் -19 வைரஸ் தாக்கம் சிங்கப்பூரில் செம்மஞ்சள் எச்சரிக்கை!

சீனாவுக்கு வெளியே கொரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடாக சிங்கப்பூர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், அங்கு தற்போது செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூர் – சீனாவுக்குச் சென்று வந்தவர்கள் மற்றும் அவர்களோடு தொடர்பில் இருந்தவர்கள் என 47 பேருக்கு சிங்கப்பூரில் கொவிட்- 19 வைரஸ் தாக்கம் இருப்பது கண்டறியப்பட்டதையடுத்து சிங்கப்பூர் அரசாங்கம் முதலில், மஞ்சள் எச்சரிக்கையை அறிவித்தது.

இந் நிலையில், சீனாவிலிருந்து திரும்பியவர்களோடு தொடர்பில்லாத உள்ளூர்வாசிகளுக்கும் இந்த வைரஸ் தாக்கம் இருப்பது தற்போது தெரிய வந்துள்ளதையடுத்து, செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த எச்சரிக்கையை அடுத்து, கொவிட் – 19 வைரஸால் பாதிக்கப்பட்டவர்களும் அவர்களுடன் தொடர்பில் இருந்த அனைவரும் சுகாதார அமைச்சகத்தின் கண்காணிப்பின் கீழ் கொண்டுவரப்படவுள்ளனர்.

கொவிட்-19 வைரஸைக் கட்டுப்படுத்துவதில் சிங்கப்பூர் சுகாதார அமைச்சகம் தீவிரமாக செயற்பட்டு வருகிறது.

இதேவேளை சிங்கப்பூர் வங்கி ஒன்றில் ஒரு ஊழியருக்கு கொவிட்-19 வைரஸ் தாக்கியதால், அங்கு கடமையாற்றிய 300 ஊழியர்களையும் குறித்த வங்கி வீட்டுக்கு அனுப்பியுள்ளது.

சிங்கப்பூர் டி.பி.எஸ் வங்கிக் கிளை அமைந்திருக்கும் கட்டடத்தின் 43வது மாடியில் வேலை செய்யும் 300 ஊழியர்களே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வீட்டுக்கு அனுப்பப்பட்டு, அங்கிருந்தே வேலை செய்யும்படி கேட்டுக்கொள்ளப்பட்டனர் என்று அந்த வங்கி விடுத்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிக்கலான இத்தருணத்தில் குறிப்பிட்ட ஊழியருக்கும், அவரது குடும்பத்துக்கும் தேவையான எல்லா ஆதரவையும், வழிகாட்டுதலையும் வங்கி அளிக்கும், என்றும் அந்த வங்கி தெரிவித்துள்ளது.

மேலும் யார் யார் அந்தக் குறிப்பிட்ட ஊழியருடன் நெருங்கிய தொடர்பில் இருந்தது என்பது ஆராயப்படுவதாகவும், மெரினா பேஃபினான்சியல் சென்டர் கட்டடத்தின் மின் தூக்கி, கழிப்பிடங்கள் போன்ற பொதுப் பயன்பாட்டு இடங்கள், முழுமையாக சுத்தம் செய்யப்பட்டு, கிருமி நீக்கம் செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

வீட்டுக்கு அனுப்பப்பட்ட எல்லா ஊழியர்களுக்கும், தெர்மா மீட்டர், முகக் கவசம், கிருமி நீக்கிகள் உள்ளடங்கிய பராமரிப்பு உபகரணத் தொகுப்பு வழங்கப்பட்டுள்ளதுடன், அவர்களுக்கு மருத்துவ உதவிக்கான சேவை ஏற்பாடும் செய்யப்பட்டுள்ளது.

சிங்கப்பூர் ‘கிருமித் தொற்று எதிர்வினை அமைப்பு’ இந்தக் கிருமித் தொற்று தொடர்பான எச்சரிக்கை சமிக்ஞையை செம்மஞ்சள் நிறமாக உயர்த்தியுள்ளது.

இதன் பொருள், இந்த நோய் தீவிரமானது, ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு எளிதில் பரவக்கூடியது என்பதாகும்.

இதன் விளைவாக, எல்லா நிறுவனங்களும், பொது இடங்களும், தங்கள் ஊழியர்களை, வருகை தருவோரை, காய்ச்சல் இருக்கிறதா என்று சோதிக்க ஆரம்பித்துள்ளன.

கோவிட்-19 என்று அதிகாரபூர்வமாக அழைக்கப்படத் தொடங்கியுள்ள இந்த நோயால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை சீனாவில் 1,350ஐக் கடந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.(s)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!