சர்வதேச குத்துச்சண்டைப் போட்டியில் இலங்கை சம்பியனாகத் தெரிவு!

கண்டியில் பத்து நாடுகள் கலந்து கொண்ட கிக் பொக்சிங் குத்துச்சண்டைப் போட்டியில் அதிக பதக்கங்களைப் பெற்று இலங்கை சம்பியனாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளது.

கண்டியில் பத்து நாடுகள் கலந்து கொண்ட சர்வதேச குத்துச்சண்டைப் போட்டிகள் கடந்த 10 மற்றும் 11ஆம் திகதிகளில் நடைபெற்றது.

இலங்கை சவாட் கிக்பொக்சிங் குத்துச்சண்டை அமைப்பின் ஏற்பாட்டில் அவ் அமைப்பின் தலைவரும் சர்வதேச கிக்பொக்சிங் பயிற்றுவிப்பாளருமான சி.பூ.பிரசாத் விக்கிரமசிங்க தலைமையில், இலங்கையில் முதல் முதலாக சர்வதேச நாடுகள் கலந்து கொண்ட கிக்பொக்சிங் குத்துச்சண்டைப் போட்டி இடம்பெற்றது.

கண்டி மாவட்டம் நாவலப்பிட்டியில் ஜயந்த விளையாட்டு மைதான உள்ளக அரங்கில் நடைபெற்ற குத்துச்சண்டைப் போட்டியில், பிரான்ஸ், சிங்கப்பூர், கனடா, இந்தியா, பாகிஸ்தான், பெல்ஜியம், ஆப்கானிஸ்தான், பல்கேரியா, எகிப்து மற்றும் இலங்கை உட்பட பத்து நாடுகள் பங்குபற்றின.

வடக்கு மாகாணத்தை பிரதிபலித்து ஏழாம் அறிவு தற்காப்புக்கலை அமைப்பின் தலைவரும் வடக்கு மாகாண கிக்பொக்சிங் பயிற்றுவிப்பாளருமான எஸ். நந்தகுமார் தலைமையில் சென்ற 20 வீர, வீராங்கனைகள் சர்வதேச குத்துச்சண்டைப் போட்டியில் கலந்து கொண்டு 17 தங்கப் பதக்கங்களையும் 02 வெள்ளிப் பதக்கங்களையும் சுவீகரித்தனர்.

சர்வதேச நாடுகள் கலந்து கொண்ட இக் குத்துச்சண்டைப் போட்டியில் அதிக பதக்கங்களைப் பெற்ற இலங்கை முதலாம் இடத்தைப் பெற்று சம்பியனாக தெரிவு செய்யப்பட்டதுடன், இரண்டாம் இடத்தை இந்தியாவும், மூன்றாம் இடத்தை பிரான்சும் பெற்றுக் கொண்டன.

வெற்றி பெற்ற வீரர்களுக்கு, நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட நாவலப்பிட்டி மாநகர சபையின் மேயர் எஸ்.ஏ.சசங்க சம்பத் மற்றும் ஏனைய அதிதிகள் பதக்கங்களையும் சான்றிதழ்களையும் வழங்கி வைத்தனர்.

பரிசில்கள் வழங்கி வைத்த அதிதிகளுக்கு நினைவுப் பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன.

சிறந்த குத்துச்சண்டை வீரர் வீராங்கனைகளுக்கான பரிசில்களும் அதிதிகளால் வழங்கி வைக்கப்பட்டது.(s)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!