கிளி. மகா வித்தியாலய வருடாந்த விளையாட்டு போட்டி!!

கிளிநொச்சி மகா வித்தியாலய வருடாந்த விளையாட்டு போட்டி, இன்று நடைபெற்றது.

சொந்த மைதானத்தில் இன்று இடம்பெற்ற விளையாட்டு போட்டியில், மாணவர்கள் உற்சாகத்துடன் பங்கேற்றனர்.

கிளிநொச்சி மகா வித்தியாலயத்திற்கு சொந்தமான காணியில், கடந்த 11 வருடங்களாக, விளையாட்டு போட்டிகளை மேற்கொள்ள முடியாத நிலை காணப்பட்டது.

2008 ஆம் ஆண்டு இறுதியாக இடம்பெற்ற விளையாட்டு போட்டியை அடுத்து, இடம்பெயர்வு ஏற்பட்டது.

அதனைத்தொடர்ந்து, மைதானம் உட்பட பல பிரதேசங்கள், இராணுவ கட்டுப்பாட்டில் காணப்பட்டது.

மீள்குடியேற்றத்தின் பின்னர், பாடசாலை விளையாட்டு போட்டியை நடாத்துவதில் பெரும் சிரமங்களை எதிர்கொண்ட பாடசாலை சமூகம், பல்வேறு தரப்பினர் ஊடாக கோரிக்கைகளை முன்னெடுத்து வந்தது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், கிளிநொச்சி சென்ற போதும், மைதானம் தொடர்பில் அவரது கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

எனினும், பாடசாலை காணி விடுவிக்கப்படவில்லை.

குறித்த காணியையும் இணைத்து, சர்வதேச விளையாட்டு மைதானம் அமைக்கம் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வந்தது.

ஆனால், காணி படையினரால் விடுவிக்கப்பட்டிருந்த நிலையில், அரச அதிகாரிகள், மைதானக் காணியை பாடசாலை சமூகத்திடம் மீள கையளிக்க நடவடிக்கை எடுத்திருந்தனர்.

எனினும், குறித்த நடவடிக்கைகளுக்கு பல்வேறு தரப்பிடம் இருந்தும் இடையூறுகள் ஏற்படுத்தப்பட்டன.

இந்த நிலையில், பாடசாலை சமூகம் எடுத்துக்கொண்ட முயற்சியினால், 11 வருடங்களின் பின்னர், பாடசாலை மாணவர்கள், தமது சொந்த மைதானத்தில், இன்று திறனாய்வு போட்டிகளை உட்சாகத்துடன் மேற்கொண்டிருந்தனர்.

2 ஆயிரத்து 500க்கு மேற்பட்ட மாணவர் தொகை கொண்ட, கிளிநொச்சி மகா வித்தியாலயம், இதுவரை காலமும், கழக மைதானங்களிலும், பாடசாலை முற்றத்திலும், தமது விளையாட்டுக்களை முன்னெடுத்து வந்தது.

வசதிக் குறைவின் மத்தியிலும், பல வீரர்கள் தேசிய ரீதியில் சாதனைகளை நிலைநாட்டியுள்ளனர்.

இன்றைய இல்ல மெய்வல்லுனர் போட்டி, அதிபர் ஜெயந்தி தனபாலசிங்கம் தலைமையில் இடம்பெற்றது.

நிகழ்வில், கிளிநொச்சி வலயக் கல்வி பணிப்பாளர் கிறிஸ்தோபர் கமலராஜன், முதன்மை அதிதியாக கலந்துகொண்டார்.

அத்துடன், கோட்டக் கல்வி பணிப்பாளர்கள், ஆசிரிய ஆலோசகர்கள், படை உயர் அதிகாரிகள், அதிபர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இதன் போது, பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்ற போதும், மாணவர்களின் உடற்பயிற்சி நிகழ்வு, மைதானத்தை அலங்கரித்தது.

11 வருடங்களின் பின்னர், வசதியானதும், விசாலமானதுமான சொந்த மைதானத்தில், மாணவர்கள் உற்சாகத்துடன் போட்டிகளில் பங்குபற்றியிருந்தனர். (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!