இலங்கை இளையோர் அணி, 10 ஆவது இடத்தைப் பெற்று ஏமாற்றம் அளித்தது.

தென்னாபிரிக்காவில் நடைபெற்று வருகின்ற 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கிண்ணப் போட்டியில் பங்குகொண்ட இலங்கை அணி, முதல் சுற்றுடன் வெளியேறியது.

இந்த நிலையில், இங்கிலாந்துடன் நடைபெற்ற கிண்ணத்துக்கான இறுதிப் போட்டியில் தோல்வியைத் தழுவிய இலங்கை இளையோர் அணி, 10 ஆவது இடத்தைப் பெற்று ஏமாற்றம் அளித்தது.

இது இவ்வாறிருக்க, 2022 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளில் நடைபெறவுள்ள ஐ.சி.சி இன் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கிண்ணப் போட்டிகளை இலக்காகக் கொண்டு விசேட திட்டமொன்றை இலங்கை கிரிக்கெட் நிறுவனம் முன்னெடுக்கவுள்ளது.

இதன்படி, 15 வயதுக்கு உட்பட்ட வீரர்களை உள்ளடக்கிய 2 அபிவிருத்தி அணிகளை கொழும்பு மற்றும் தம்புள்ளை ஆகிய பிரதேசங்களில் ஸ்தாபிப்பதற்கு இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தீர்மானித்துள்ளது.

இம்முறை நடைபெற்ற மாகாணங்களுக்கு இடையிலான போட்டித் தொடரில் திறமைகளை வெளிப்படுத்திய 54 வீரர்கள் இந்த அபிவிருத்தி குழாத்தில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.

அத்துடன், இரண்டு கட்டங்களைக் கொண்டதாக நடைபெறவுள்ள இந்த நிகழ்ச்சியின் முதல் கட்டம் 35 வீரர்களினது பங்குபற்றலுடன் கொழும்பு ஆர். பிரேமதாஸ மைதானத்திலும், இரண்டாவது கட்டம் கண்டி, மாத்தளை, யாழ்ப்பாணம், அநுராதபுரம் மற்றும் மட்டகளப்பு ஆகிய பிரேதங்களில் இருந்து தேர்வு செய்யப்பட்ட 19 வீரர்களினது பங்குபற்றலுடன் தம்புள்ளை சர்வதேச கிரிக்கெட் மைதானத்திலும் இடம்பெறவுள்ளது.

மேலும், இந்த 54 வீரர்களினதும் தகவல்களை திரட்டி, அவர்களது பலம் மற்றும் பலவீனம் என்பவற்றை இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தகவல் கேந்திர நிலையம் முன்னெடுக்கவுள்ளது.

அதுமாத்திரமின்றி, பெற்றோர்களுக்கு அறிவிக்கப்பட்ட பிறகு இவ்வனைத்து வீரர்களுக்கும் 6 மாதகால பயிற்சிகளும், விசேட கருத்தரங்குகளும் நடத்தப்படவுள்ளதுடன், வீரர்களுக்கான தங்குமிட வசதிகள் உள்ளிட்ட அனைத்து தேவைகளையும் இலங்கை கிரிக்கெட் சபை பூர்த்தி செய்து கொடுக்கும்.

இந்த நிலையில், கொழும்பு ஆர். பிரேமதாஸ மைதானத்தில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள உயர் திறன் அபிவிருத்தி மையத்தின் பிரதானி டிம் மெக்ஸ்வெல்லின் ஒருங்கிணைப்புடன் இடம்பெறவுள்ள இந்த நிகழ்ச்சியினை மேற்பார்வை செய்வதற்கு இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரான அநுர தென்னகோன் நியமிக்கப்பட்டுள்ளார்.

அத்துடன், இலங்கை கிரிக்கெட் நிறுவனத்துடன் பயிற்சியாளர்களாக பணியாற்றி வருகின்ற முன்னாள் வீரர்களான ரோய் டயஸ், சுமித்ர வர்ணகுலசூரிய, ரவீந்திர புஷ்பகுமார மற்றும் தம்மிக சுதர்ஷன ஆகியோர் இவ்விரண்டு அபிவிருத்தி அணிகளின் பயிற்சியாளர்களாக செயற்படவுள்ளனர்.

இதுதொடர்பில் கொழும்பு ஆர். பிரேமதாஸ மைதானத்தில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் உயர் திறன் அபிவிருத்தி மையத்தின் பிரதானி டிம் மெக்ஸ்வெல் கருத்து தெரிவிக்கையில்,

இந்த குழாத்தில் அனைத்து வீரர்களுக்கும், மைதானத்துக்கு உள்ளேயும், வெளியேயும் இடம்பெறுகின்ற சகல விடயங்களும் சொல்லிக் கொடுத்து அவர்களது எதிர்காலத்துக்கான சிறந்த அடித்தளத்தை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

அதிலும் குறிப்பாக வேகப் பந்துக்கும், சுழல் பந்துக்கும் எவ்வாறு முகங்கொடுக்க வேண்டும் என்பது தொடர்பிலும் அவர்களுக்கு பயிற்சிகள் அளிக்கப்படவுள்ளது என தெரிவித்தார்.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!