மன்னார் ‘டைமன் ஸ்டார்’ விளையாட்டுக் கழகத்தின் உதைபந்தாட்டத் தொடர் – சென் ஜோசப் அணி வெற்றி

மன்னார் ‘டைமன் ஸ்டார்’ விளையாட்டுக் கழகத்தின் உதைபந்தாட்டத் தொடரில் சென் ஜோசப் முத்தரிப்புத் துறை அணி கிண்ணத்தைச் சுவீகரித்துக் கொண்டுள்ளது.

நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட ‘டைமன் ஸ்டார்’ விளையாட்டுக் கழகத்தின் 45 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு மாபெரும் உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டி கடந்த மூன்று நாட்களாக நானாட்டான் பிரதேச பொது விளையாட்டு மைதானத்தில் இடம் பெற்றது.

சுமார் 40 அணிகள் பங்கு பற்றிய உதைபந்தாட்டப் போட்டியில் முத்தரிப்புத்துறை சென் ஜோசப் அணியும், தேவன்பிட்டி சென் சேவியர் அணியும் இறுதிப் போட்டிக்கு தெரிவாகியிருந்தன.

இறுதிப் போட்டி நேற்று மாலை 4.30 மணிக்கு ஆரம்பமானது.

போட்டியில் இரண்டு அணிகளும் விறுவிறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தின.

போட்டியின் ஆட்ட நேர முடிவு வரை, இரண்டு அணிகளும் கோல்கள் எதனையும் பெற்றுக் கொள்ளாத காரணத்தால் சமனிலை தவிர்ப்பு உதை வழங்கப்பட்டது.

இதன் போது 4.3 என்ற கோல் கணக்கில் முத்தரிப்புத் துறை சென் ஜோசப் அணி வெற்றி பெற்றது.

வெற்றி பெற்றவர்களுக்கான கேடயங்களும் பணப்பரிசில்களும் சிறப்பு விருந்தினர்களினால் வழங்கி வைக்கப்பட்டன.

மன்னார் டைமன் ஸ்டார் விளையாட்டுக் கழகத்தின் இறுதிப் போட்டி நிகழ்வில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், சாள்ஸ் நிர்மலநாதன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோகராதலிங்கம், நானாட்டான் பிரதேச செயலக பிரதேச செயலாளர், நானாட்டான் பங்குத்தந்தை டைமண்ட் ஸ்டார் விளையாட்டு கழக வீரர்கள் கிராம மக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!