கிழக்கு மாகாண முதலமைச்சர் ஆசனத்தினை தமிழ் தேசிய கூட்டமைப்பு முஸ்லீம்களுக்கு விட்டுக் கொடுத்ததில் எந்த பலனும் கிடைக்கவில்லை எனத் தெரிவித்துள்ள அமைச்சர் மனோ கணேசன் கல்முனை வடக்கு பிரதேச செயலகம் முழுமையான பிரதேச செயலகமாக மாறுவதற்கு முஸ்லீம்கள் ஆதரவளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
டான் செய்திப்பிரிவிற்கு தொலைபேசி ஊடாக இன்று கருத்து வெளியிடும்போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அமைச்சர் மனோகணேசன்,
கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரம் உயர்த்தக்கோரி போராட்டம் நடைபெற்று வருகின்றது.
இதனால் கிழக்கு மாகாணத்தில் வாழ்கின்ற தமிழ், முஸ்லீம் மக்களின் ஒற்றுமை கேள்விக்குறியாக மாறியிருக்கின்றது.
இந்தக் கோரிக்கையின் நியாயத்தை புரிந்து கொண்டு தமிழ்-முஸ்லிம் மக்களின் ஒற்றுமையை நிலைநாட்டுமாறு முஸ்லிம் மக்களை பிரதிநிதித்துவப் படுத்துகின்ற அரசியல் தலைவர்கள், சமூக அமைப்புக்கள் அங்கு வாழ்கின்ற மக்களிடம் கோரிக்கை விடுகின்றேன்.
கல்முனை மாநகரசபைக்கு உள்ளே சாய்ந்தமருது, கல்முனை தெற்கு பகுதிகள் கல்முனை தெற்கு பிரதேச செயலகத்திற்குள்ளே இருக்கின்றது.
இங்கே முஸ்லிம் மக்கள் பெரும்பான்மையாக வாழ்கின்றார்கள்.
அதேபோன்று சர்ச்சைக்குரிய கல்முனை வடக்கு பிரதேச செயலகம் அமைந்துள்ள பகுதியிலே தமிழ் மக்கள் பெரும்பான்மையாக வாழ்கின்றார்கள்.
கல்முனை மாநகரசபைக்குள்ளே முஸ்லீம் மக்கள் அதிகம் வாழும் சாய்ந்த மருது பிரதேசம் அமைக்கப்பட்டுள்ளது.
இது மட்டும் போதாது என்று கல்முனை மாநகரசபைக்குள் இருந்து வெளியே எடுத்து நகரசபையாக மாற்றம் செய்ய வேண்டும் என்று சாய்ந்தமருது பள்ளிவாசல் தலைவர்களும் அதுசார்ந்த மக்களும் போராடிக்கொண்டிருக்கின்றார்கள்.
அதனை முன்நிலைப்படுத்தி கடந்த உள்ளுராட்சிச்சபைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றியும் பெற்றார்கள்.
எனவே ஒரே இனமான முஸ்லிம் மக்கள் சாய்ந்தமருது கல்முனை தெற்கிலே வேறு வேறான பிரதேச செயலங்கள் அமைய வேண்டும் என கோரிக்கை விடுத்துவரும் நிலையில்.
கல்முனை வடக்கிலே வாழ்கின்ற தமிழ் மக்கள் ஏற்கனவே இருக்கின்ற உப பிரதேச செயலகத்தினை தரம் உயர்த்துமாறு கோரிக்கை விடுவதில் என்ன தவறு இருக்கின்றது? என்பதை முஸ்லிம் அரசியல் தலைவர்கள் நாட்டிற்கும் அரசாங்கத்திற்கும் தெரியப்படுத்த வேண்டும்.
கடந்த காலங்களிலே தமிழ் மக்களுக்கு எதிராக முஸ்லிம் மக்களும் முஸ்லிம் மக்களுக்கு எதிராக தமிழ் மக்களும் தூண்டிவிடப்பட்டார்கள்.
தற்போதும் இந்த நிலை காணப்படுகின்றது.
இதனை மனதில் கொண்டு நியாயமான கோரிக்கைக்கு முஸ்லீம் அரசியல்வாதிகள் இடமளிக்க வேண்டும்.
நிலத்தொடர்பற்ற பிரதேச செயலகங்கள் அமைக்கப்படக்கூடாது என்றோ அல்லது இனரீதியான பிரதேச செயலங்கள் அமைக்கக்கூடாது என்றோ தட்டிக் களித்துவிட முடியாது.
ஏனெனில் ஏற்கனவே கிழக்கு மாகாணத்தில் இன ரீதியான பிரதேச செயலகங்கள், கல்வி வலயங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
அதேபோன்று நிலத் தொடர்பற்ற கல்வி வலயங்கள் பிரதேச செயலகங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
தமிழ் மக்கள் அதிகம் வாழக்கூடிய மட்டக்களப்பு மாவட்டத்திலே ஓட்டமாவடி பிரதேச செயலகமும் வாழைச்சேனை பிரதேச செயலகமும் அதன் கீழ் வருகின்ற பல நிலப்பகுதிகள் மாற்று இனத்தவர்கள் வாழ்கின்ற இடங்களாக அடையாளப்படுத்தப்பட்டு இருக்கின்றன.
மட்டக்களப்பு மாவட்டத்தில் நிலத் தொடர்பற்ற கல்வி வலயங்கள் இருக்கின்றன.
இப்படி தங்களுக்கு என்று வரும்போது வலயங்களை செயலகங்களை அமைத்துக் கொள்வதும் இன ரீதியாக பலவற்றை உருவாக்கிக் கொள்வதும் இருக்கின்றது.
ஆனால் தமிழ் மக்கள் கோரிக்கையினை முன் வைக்கும்போது மட்டும் அதனை இனரீதியான பார்ப்பது இனத்துவேசமாக வர்ணிப்பது நியாயமா? என முஸ்லிம் மக்களை கேட்கவிரும்புகின்றேன்.
தமிழ் மக்களும் முஸ்லிம் மக்களும் ஒன்றாக வாழ வேண்டும் என விரும்புவார்களே ஆனால் இந்த நியாயமான கோரிக்கைக்கு இடமளித்து விலகிக்கொள்ளுமாறு வேண்டிக் கொள்கின்றேன்.
கடந்த மாகாணசபைத் தேர்தலில் 11 ஆசனங்களை பெற்றுக் கொண்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு 7 ஆசனங்களை மட்டும் பெற்றுக் கொண்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்கு முதலமைச்சர் ஆசனத்தை விட்டு கொடுத்தது.
நல்லிணக்க அடிப்படையில் விட்டுக் கொடுத்தது.
ஆனால் தற்போது பார்க்கும்போது அதில் பிரியோசனம் இருப்பதாக தெரியவில்லை.
எனவே அன்று தமிழ் தேசிய கூட்டமைப்பு நல்லெண்ணத்தை வெளிப்படுத்தியதைப்போன்று இன்று முஸ்லீம் காங்கிரஸ் நல்லெண்ணத்தை வெளிப்படுத்த வேண்டும்.
தமிழ் மக்கள் மத்தியில் இருக்கின்ற நியாயத்தினை முஸ்லீம் மக்களுக்கு எடுத்துக் கூறி கல்முனை பிரதேச செயலகத்தினை முழுமையான பிரதேச செயலகமாக மாற்றுவதற்கு ஆதரவளிக்க வேண்டும் என நல்லிணக்க ஒருமைப்பாட்டு அமைச்சர் என்ற ரீதியில் கோரிக்கை விடுகின்றேன். என்று தெரிவித்தார். (நி)