கல்முனைப் போராட்டம் தொடர்கிறது!

அம்பாறை கல்முனை வடக்கு பிரதேச செயலகப் பிரிவினை தரம் உயர்த்துமாறு கோரி பிரதேச செயலகம் முன்பாக சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களை பல்வேறு அரசியல் பிரமுகர்களும், மதத்தலைவர்களும் சந்தித்து வருகின்றனர்.

மட்டக்களப்பு ஆயர் இல்லத்தில் இருந்து ஆயர் வணக்கத்திற்குரிய பொன்னையா ஜேசப் ஆண்டகை சார்பில் கலந்துகொண்ட அருட்தந்தையர் குழுவினர், தமது ஆதரவினைத் தெரிவித்துள்ளனர்.
இக் குழுவில் அருட்தந்தை தேவா, அருட்தந்தை ஜேசுதாசன், அருட்தந்தை சுலுக்சன், அருட்தந்தை ஜோண்டிலிமா ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

அத்துடன் இலங்கைத் தமிழர் ஒன்றியத்தின் பிரதிநிதிகளும் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டவர்களை சந்தித்தனர்.
கிழக்கு தமிழர் ஒன்றியத்தின் தலைவர் சட்டத்தரணி சிவநாதன், பேராசிரியர் மா.செல்வராஜா உட்பட கிழக்கு தமிழர் ஒன்றியத்தின் பிரதிநிதிகள் பலர் கலந்துகொண்டு தமது ஆதரவினைத் தெரிவித்தனர்.

இதேவேளை தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பிரதிநிதிகளும் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு தமது ஆதரவினைத் தெரவித்துள்ளனர்.

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் செயலாளர் பிரசாந்தன் உள்ளிட்ட குழுவினர் இச்சந்திப்பில் கலந்து கொண்டனர்.

அத்துடன் அம்பாறையிலிருந்து பௌத்த மதத்தலைவர்கள் அடங்கிய குழுவினரும், கல்முனை பிரதேசத்தை வந்தடைந்துள்ளனர்.

கல்முனைவாழ் தமிழ் மக்களும் இளைஞர்களும் இப்போராட்டத்திற்கு தமது அமோக ஆதரவினை வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கல்முனை வடக்குப் பிரதேச செயலகத்தை தரமுயர்த்தக்கோரி இன்று இரண்டாவது நாளாக கல்முனை சுபத்ராராம விகாராதிபதி ரன்முத்துக்கல சங்கரத்னதேரர் உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

கடந்த பல வருடங்களாக கல்முனைப் பிரதேசசெயலகத்தை தரமுயர்த்த அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் எடுத்த முயற்சிகள் எதுவும் கைகூடாத நிலையில், கல்முனை சுபத்ராராம விகாராதிபதி சங்கரத்தனதேரர் தமிழ் மக்களுக்காகவும், தமிழ் மக்களின் நலன் வேண்டியும் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!