பலாச்சோலை கிராமத்தில் பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்!


மீன்வளர்ப்பு திட்டம் என்ற போர்வையில் தோண்டப்படும் பாரிய குழியிலிருந்து எடுக்கப்படும் மணலை, சட்டவிரோதமாக விற்பனை செய்வதை தடைசெய்யுமாறுகோரி மட்டக்களப்பு- களுவன்கேணி பலாச்சோலை கிராமத்தில் பொதுமக்களால் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள பலாச்சோலை கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் இவ்வார்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.

ஆர்ப்பாட்டக்காரர்கள் தமது கோரிக்கையடங்கிய வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறு கோசங்களை எழுப்பினர்.

பலாச்சோலைக்கிராமத்தின் மூன்று இடங்களில் சில நபர்கள் காணிகளை கொள்வனவு செய்து மீன்வளர்ப்புத் திட்டத்திற்கான அனுமதியினைப் பெற்று கடந்த ஒன்றரை வருடகாலமாக பாரிய குழிகளைத் தோண்டுகின்றனர்.

இக்குழிகளிலிருந்து எடுக்கப்படும் மணல் வெளிமாவட்டங்களுக்குக் கொண்டுசெல்லப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக குற்றஞ்சாட்டப்படுகிறது.

மணல் வியாபாரிகளின் இந்த நடவடிக்கையினால் மாரிகாலத்தில் பலாச்சோலைக்கிராமம் முற்றாக வெள்ளத்தில் மூழ்கும் அபாயநிலை ஏற்படுவதாக மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

இவ்விடயம் தொடர்பாக பிரதேச செயலாளர் உள்ளிட்ட பல அதிகாரிகளிடம் முறையிட்ட போதிலும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையென பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.(சி)

Recommended For You

About the Author: Nasar

error: Content is protected !!