ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் எண்ணக்கருவிற்கமைவாக நாட்டிலுள்ள அனைத்து பிரதேச செயலகப்பிரிவுகளிலும் அமுல்படுத்தப்படவுள்ள ‘நிறைவான கிராமம்’ தேசிய அபிவிருத்தி வேலைத்திட்டத்தினை மட்டக்களப்பு ஏறாவூர் பிரசேத்திலும் முன்னெடுப்பது தொடர்பாக அரசாங்க ஊழியர்களுக்கு அறிவூட்டும் விசேட கூட்டம் பிரதேச செயலக மண்டபத்தில் நடைபெற்றது.
மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் அபிவிருத்திக் குழுத் தலைவருமான எஸ்.வியாழேந்திரன் இக்கூட்டத்தில் கலந்துகொண்டு விளக்கமளித்தார்.
பிரதேச செயலாளர் அல்- அமீன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் கல்வி, சுகாதாரம், மீன்பிடி, உள்ளிட்ட அனைத்து துறைசார் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களும் கலந்துகொண்டனர்.
சபிரிகம திட்டத்தினை ஏறாவூர்ப் பிரதேசத்தில் அமுல்படுத்துவதற்கென 34 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்படவுள்ளதுடன் இந்நிதியின் மூலம் 17 கிராம சேவையாளர் பிரிவுகளிலும் தலா இருபது இலட்சம் ரூபாவிற்கான அபிவிருத்திப்பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
அரசு சார்பு பிரதிநிதியொருவரை மையப்படுத்தியதாக தெரிவு செய்யப்படும் கிராமிய குழுவின் மூலம் இந்த அபிவிருத்திப்பணிகள் நடைமுறைப்படுத்தப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது. (சி)