வேலை வாய்ப்பை விரைந்து வழங்கக் கோரி ஜனாதிபதியை சந்திக்க வடக்கு மாகாண பட்டதாரிகள் தீர்மானித்துள்ளனர்.
வடக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகள் ஒன்று கூடல் யாழ் ஆரியகுளம் பகுதியிலுள்ள முற்போக்கு வாலிபர் கழக மண்டபத்தில் இன்று நடைபெற்றது.
வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் வடக்கு மாகாணத் தலைவர் சிவராமகிருஸ்ணன் தலைமையில் நடைபெற்ற ஒன்று கூடலில் வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான பட்டதாரிகள் கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது கருத்து வெளியிட்ட பட்டதாரிகள் தமக்கான வேலை வாய்ப்புக்களை வழங்குவதற்குரிய நடவடிக்கைகளை ஆட்சிக்கு வந்துள்ள புதிய அரசாங்கம் மேற்கொள்ள வேண்டுமென வலியுறுத்தியுள்ளனர்.
கடந்த அரசாங்கம் பட்டதாரிகள் அனைவருக்கும் வேலை வாய்ப்பை வழங்குவதாக கூறினாலும் குறிப்பிட்ட அளவிலானோருக்கே வேலை வாய்ப்பை வழங்கியுள்ளது.
அதனால் இன்னும் பெருமளவிலானோருக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படவில்லை என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எனவே, அனைவருக்கும் பாகுபாடுகளின்றி வேலை வாய்ப்பை விரைந்து வழங்க வேண்டும் என்றும், இதற்கமைய புதிய அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென பட்டதாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
இதேவேளை, வேலைவாய்ப்பை வழங்க வலியுறுத்தி ஐனாதிபதிக்கு மகஜர் ஒன்றும் கையளிப்பதென்றும் இந்தக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளனர்.