ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியிலிருந்தபோது முன்னெடுக்கப்பட்ட போராட்டங்கள் அரசியல் நோக்கம் கொண்டவை என்று சிறிகொத்தாவில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர தெரிவித்துள்ளார்.
இங்கு கருத்து தெரிவித்த ஹிருணிகா பிரேமசந்திர,
ஐக்கிய தேசியக் கட்சி அரசு ஆட்சியிலிருந்தபோது அரச வைத்திய அதிகாரிகள், ரயில் ஊழியர்கள், பேருந்து சேவை ஊழியர்கள் என அனைவரும் வேலைநிறுத்தப் போராட்டங்களை மேற்கொண்டனர்.
தற்போதும் அவர்களுடைய கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை.
ஆனால் போராட்டங்களும் முன்னெடுக்கப்படவில்லை.
இதிலிருந்து இவர்களுடைய போராட்டங்களின் பின்னணியில் யார் இருந்திருக்கிறார்கள் என்பது தெளிவாகின்றது.
மேலும் கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது பொருட்களின் விலையதிகரிப்பு குறித்து பேசுவதற்கு எதுவுமிருக்கவில்லை.
எனவே ஈஸ்டர் தாக்குதல்கள் குறித்து பேசினார்கள்.
2015 ஜனாதிபதித் தேர்தலின்போது முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை இலக்குவைத்து மிகமோசமான கருத்துக்கள் கூறப்பப்பட்டன.
ஆனால் அவர் ஜனாதிபதியானதும் அதற்காக பழிவாங்கல்கள் எவையும் முன்னெடுக்கப்படவில்லை.
அதேபோன்று தற்போதைய ஆளுந் தரப்பினரால் தேர்தல் பிரசாரங்களின்போது மிலேனியம் உடன்படிக்கை குறித்து பல்வேறு போலிப் பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டன.
ஒருவருடைய கருத்துக்களுக்காக நடவடிக்கை எடுப்பது என்றால் இவ்விடயங்கள் தொடர்பாகவும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
என மேலும் தெரிவித்தார்.