விடுதி ஒன்றின் சுகாதரம் தொடர்பில், சுற்றுலாப் பயணிகளின் முறைப்பாட்டை , விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு அமைச்சர் உத்தரவு

நாட்டுக்கு வருகை தந்த மூன்று சுற்றுலாப் பயணிகள் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்து மீண்டும் தமது சொந்த நாடுகளுக்கு திரும்பிச் சென்ற சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்தி அறிக்கை சமர்பிக்குமாறு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க உத்தரவிட்டுள்ளார்.

சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் தலைவருக்கே அமைச்சர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நெதர்லாந்து நாட்டில் இருந்து வருகை தந்த மூன்று சுற்றுலாப் பயணிகள் தம்புள்ள பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் தங்கியுள்ளனர்.

அதற்காக அவர்கள் 60 ஆயிரம் ரூபாவை செலுத்தியுள்ளனர்.

எனினும் அந்த விடுதியின் மலசலகூடத்தில் இருந்து துர்நாற்றம் வரவே அதனை பொறுத்துக்கொள்ள முடியாத சுற்றுலாப் பயணிகள் தாம் வேறு விடுதிக்கு சென்று தங்குவதற்கு தீர்மானித்து, எஞ்சிய பணத்தை கேட்டுள்ளனர்.

அதற்கு விடுதி நிர்வாகத்தினர் உடன்படாமையால் கடந்த 24 ஆம் திகதி தம்புள்ள பொலிஸ் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துவிட்டு அவர்கள் தமது நாடுகளுக்கு திரும்பி சென்றுள்ளனர்.

குறித்த மூன்று சுற்றுலாப் பயணிகளில் பெண் வைத்தியர் ஒருவரும், இரண்டு சட்டத்தரணிகளும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையில் நாட்டின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் இவ்வாறான சம்பவங்களை நிறுத்துவதற்காக குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்தி அறிக்கை சமர்பிக்குமாறு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் தலைவருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!