வவுனியா ஓமந்தையில், குடியிருக்காத மக்களின் காணிகளை, காணியற்றவர்களுக்கு வழங்குமாறு கோரிக்கை

வவுனியா ஓமந்தையில் அமைந்துள்ள, அரச உத்தியோகத்தர் குடியிருப்பில் வசிக்கும் மக்கள், தமது குடியிருப்பு பகுதியில் குடியிருக்காத மக்களின் காணிகளை சுவீகரித்து, காணியற்றவர்களுக்கு வழங்குமாறு இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

8 வருடங்களுக்கு முன்னர், வவுனியா மாவட்டத்தில் கடமையாற்றும் அரச உத்தியோகத்தர்களில் காணியற்றவர்களுக்கு என, ஓமந்தை பகுதியில் காணிகள் வழங்கப்பட்டு, 800 ற்கும் அதிகமானவர்கள் குடியேற ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.

இந்த நிலையில், தற்போது வரை அக்குடியிருப்பு பகுதியில், 87 குடும்பங்களே வசித்து வருவதனால், ஏனைய பகுதிகள் பற்றைக் காடுகளாகவும், மக்கள் நடமாட்டமற்ற பகுதிகளாகவும் காணப்படுவதனால், பெரும் அச்சுறுத்தலான நிலை காணப்படுவதாக, மக்கள் குறிப்பிட்டனர்.

ஆனால், குறித்த குடியிருப்பு பகுதியில் வசிக்கும் மக்களுக்கு, காணிகளுக்கான அனுமதிப் பத்திரங்களும் வழங்கப்படவில்லை.

எனவே காணி உறுதிப் பத்திரங்களையும் வழங்க வேண்டும் எனவும், காணிகளில் குடியிருக்காதவர்களின் காணிகளை சுவீகரித்து, காணி அற்றவர்களுக்கு வழங்கி, அப்பகுதியில் மக்கள் அச்சமின்றி வாழ வழி செய்ய வேண்டும் எனவும், மக்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

குடியிருப்பு பகுதிக்கு முன்பாக உள்ள வீதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள், தமது கிராமத்திற்கான அடிப்படை வசதிகளை செய்து தருமாறும், குடி நீர் பிரச்சினைக்கு தாம் முகம் கொடுப்பதுடன், வீதிகளும் கிரவல் வீதிகளாக காணப்படுவதாகவும், கவலை வெளியிட்டனர்.

இன்று, சுமார் 2 மணி நேரமாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள், தமது கோரிக்கைக்கு உரிய தீர்வு கிடைக்காவிட்டால், தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட வேண்டி ஏற்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!