அம்பாறை மாவட்டம் ஆலையடிவேம்பு பிரதேசத்தில் 100 இற்கும் மேற்பட்டவர்கள் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டதை தொடர்ந்து டெங்கொழிப்பு சிரமதானப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
ஆலையடிவேம்பு பிரதேச இந்து மாமன்றத்தின் ஒருங்கிணைப்பில் ஆலையடிவேம்பு பிரதேச செயலகம் மற்றும் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை, பிரதேச சபை, கிராம அபிவிருத்திச் சங்கம் மாதர் அபிவிருத்திச் சங்கம் ஆகியன ஒன்றிணைந்து மேற்கொண்ட இச்சிரமதானப் பணிகள் மூலம் பல்வேறு பிரதேசங்களும் சுத்தம் செய்யப்பட்டன.
பொது மக்கள் அதிகமாக ஒன்று சேரும் பாடசாலைகள், ஆலயங்கள், மைதானங்கள், சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை போன்ற இடங்களில் உள்ள டெங்கு பரவக்கூடிய இடங்கள் சுத்தம் செய்யப்பட்டதுடன் குப்பை கூழங்களும் தீயிட்டு எரிக்கப்பட்டன.
அத்தோடு டெங்கு நுளம்பின் தாக்கம் மற்றும் அதனை கட்டுப்படுத்துவது தொடர்பான விழிப்புரை கூட்டங்களும் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரிகளினால் நடாத்தப்பட்டன.
இப்பணிகளில் பொதுச்சுகாதார பரிசோதகர்கள் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கிராம உத்தியோகத்தர்கள் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கிராம அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.