குருநாகல் மாவட்டத்தில் சமுர்த்தி பயனாளிகள் கடந்த அரசாங்கத்தால் இடைநிறுத்தப்பட்டது தொடர்பாகவும் புதிய சமுர்த்தி பயனாளிகள் தெரிவுசெய்யப்பட்ட விபரங்கள் தொடர்பாக மக்கள் பிரதிநிதிகளால் முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டன.
இந்நிலையில், இது தொடர்பாக விரிவாக ஆராய்ந்து எதிர்வரும் அபிவிருத்தி குழுக் கூட்டத்தில் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று குருநாகல் மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான டி.பி.ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.
குருநாகல் மாவட்டத்தின் 2019 ஆம் ஆண்டின் இறுதி அபிவிருத்திக் குழுக் கூட்டம் மாவட்ட செயலகத்தின் கேட்போர் கூடத்தில் குருநாகல் மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் டி.பி.ஏக்கநாயக்க தலைமையில் நேற்று இடம்பெற்றது.
இந்நிகழ்வில் கலந்து கொண்ட அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்ணான்டோ, வடமேல் மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம்.முஸம்மில் உள்ளிட்டவர்கள் கருத்துக்களை தெரிவித்தனர்.
குருநாகல் மாவட்டத்தில் நிலவிய சீரற்ற காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் 2500ற்கு மேற்பட்ட விவசாய நிலங்களுக்கும் அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் ஊடாக உடனடியாக நஸ்டஈட்டுத் தொகையை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வீதிகளையும் உடனடியாக செப்பனிடுமாறு கப்பல் துறைமுகங்கள் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
குருநாகலில் உள்ள குளத்து சுற்று வட்டத்தில் அமைந்துள்ள இடங்களில் மிகவும் பெறுமதிவாய்ந்தவை என்றும், கண்டி நகரிலுள்ள தெப்பக் குளத்தை சீரமைத்து நாட்டுக்கு அதிகளவு வருமானத்தை ஈட்டித் தரும் சுற்றுலா வலயமாக மாற்றியமைப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்போவதாக வடமேல் மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம்.முஸம்மில் தெரிவித்தார்.
கூட்டத்தில் இராஜாங்க அமைச்சர் அநுரபிரியதர்சன யாப்பா, பாராளுமன்ற உறுப்பினர்களான சாந்த பண்டார, எஸ்.பி நாவின்ன, மாவட்ட செயலாளர் காமினி இலங்க ரத்ன, அரச நிறுவனங்களின் அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.