இறுதி யுத்தத்தில் தந்தை காணாமலாக்கப்பட்ட நிலையில், ஒரு கையை இழந்த தாயின் அரவணைப்பில் வாழ்ந்து வரும் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரியின் வணிகத்துறை மாணவியான இரவிச்சந்திரன் யாழினி 3ஏ சித்திகளைப் பெற்று முல்லைத்தீவு மாவட்டத்தில் முதலிடத்தைப் பெற்றுக்கொண்டுள்ளார்.
கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டிருந்தது.
வெளியிடப்பட்ட பரீட்சை முடிவுகளின் அடிப்படையில், முல்லைததீவு தேவிபுரம் பகுதியில் வசிக்கும், புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரியில் வணிகப் பிரிவில் கல்வி கற்ற இரவிச்சந்திரன் யாழினி எனும் மாணவி மாவட்ட மட்டத்தில் முதலிடம் பெற்றுச் சாதனை படைத்துள்ளார்.
சாதனை மாணவியின் தந்தை இறுதி யுத்ததின்போது காணாமலாக்கப்பட்ட நிலையில், காணாமலாக்கப்பட்டவர்களின் பட்டியலில் மாணவியின் குடும்பத்தினர் தந்தையைத்தேடி வரும் நிலையில், ஒரு கையை இழந்த தனது தாயின் அரவணைப்பில் மாணவி வாழ்ந்து வருகின்றார்.
இவ்வாறான வறுமை நிலையில், சிரமங்களுக்கு மத்தியில் கல்வி கற்று சாதனை படைத்துள்ள மாணவியையும், கணவன் காணாமல்போயுள்ள நிலையில், பிள்ளைகளின் கற்றல் நடவடிக்கைகளுக்கு தன்னம்பிக்கையுடன் ஊக்கமளித்துவரும் தாயையும் பலரும் பாரட்டி வருகின்றனர்.