நீதிமன்ற பிடியாணைக்கு பயந்த ராஜித : விமல்!!

கடந்த அரசாங்கத்தில் நியமனம் பெற்ற நீதிபதிகளும், பொலிஸ் அதிகாரிகளும், அரசியல் தலையீடு இன்றி, தற்பொழுது அவர்களுக்கு எதிராக நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக, சிறிய மற்றும் நடுத்தர தொழிற்துறை, தொழில் முயற்சி அபிவிருத்தி, கைத்தொழில் மற்றும் வளங்கள் முகாமைத்துவ அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

இன்று, கொழும்பில் ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கும் போது இவ்வாறு குறிப்பிட்டார்.

இதற்கு முன்னர் எப்போதும் குற்றம் சுமத்தப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர், கைது செய்யுமாறு நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்த பின்னரும், ஊரை விட்டு நாட்டை விட்டு ஒழித்துக் கொண்டது கிடையாது.

ராஜித சேனாரட்ண எனும் வீர புருசன் ஒருவர்தான், நீதிமன்ற பிடியாணைக்குப் பயந்து ஒழித்துக் கொண்டார்.

அவரை கண்டு பிடிப்பதற்கு பொலிஸாருக்கு ஓர் இரண்டு நாட்கள் சென்றன.

ஆனால் தற்போது அவருக்கு அவசரமாக இருதய நோய் வந்திருக்கின்றது.

அவ்வாறு அவசரமாக நோய் வருமோ என்பது எனக்கு தெரியாது.

ஆனபோதும் தற்போது அவரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

பாருங்கள் எங்கள் அரசாங்கம் புதிய நீதிபதி ஒருவரையும் நியமிக்கவில்லை.

அவர்களின் முன்னைய அரசாங்கத்தில் நியமனம்பெற்ற நீதிபதிகளே கடமையாற்றுகின்றார்கள்.

பதில் பொலிஸ்மா அதிபரும் அவர்களது அரசாங்கத்தில் நியமிக்கப்பட்டவர்.

ஆகவே நீதிமன்றத்தில் கடமையாற்றும் அனைவருமே முன்னைய அரசாங்கத்தில் பணிக்கு அமர்த்தப்பட்டவர்கள்.

எனவே குற்றம் தொடர்பில் கிடைக்கப் பெற்ற சாட்சிகள் மற்றும் வாக்குமூலங்களை ஆராய்ந்து, அதற்கேற்ப நீதி நிலைநாட்டப்படுமே தவிர, முன்னைய அரசாங்கத்தின் காலத்தில் மேற்கொள்ளப்பட்டதைப் போன்று, பிரதமரின் வதிவிடத்தில் சம்பிக்க, ராஜித, அனுரகுமார திஸ்ஸாநாயக்க போன்றவர்கள் ஒன்றுகூடி, இவரை கைது செய்வோம் என முடிவெடுப்பதைப் போன்று அல்ல தற்போதய நிலை.

முறைப்பாட்டிற்கு ஏற்ப விசாரணைகள் மேற்கொண்டு சாட்சிகளின் அடிப்படையில் செயற்படும் நீதிச் செயற்பாடே இடம்பெறுகின்றது.

ராஜித சேனாரட்ணவிற்கு உடனடியாக அவசரமாக நோய் வருவதற்கு சாத்தியமில்லை என நாம் சந்தேகப்படுகின்றோம்.

நீதிமன்ற பிடியாணைக்கு அமைய தான் கைது செய்ப்பட்டு விடுவேன் என்ற அச்சம் காரணமாகவே, மருத்துவமனைக்கு சென்றிருக்கின்றார்.

அவரின் வழக்கை கொண்டு நடத்தும் அதிகாரி, இவரின் பொய்க்கு இடமளிக்க மாட்டார் என நான் நம்புகின்றேன். என குறிப்பிட்டுள்ளார். (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!