ஜனாதிபதி, தீடீர் கண்காணிப்பு நடவடிக்கை!!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் வேரஹெர அலுவலகத்திற்கும், கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக வைத்தியசாலைக்கும், காலி முகத்திடல் பாதுகாப்பு அமைச்சு வளாகத்திற்கும், நேற்று திடீர் விஜயம் மேற்கொண்டார்.

இதன் போது, சேவையை பெற்றுக் கொள்வதற்காக அரச நிறுவனங்களுக்கு வருகை தருகின்ற எந்தவொரு நபரையும், அசௌகரியத்திற்கு உள்ளாக்காது,

உடனடியாக சரியான மற்றும் வினைத்திறனான சேவையை பெற்றுக் கொடுப்பதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படுவது, அனைத்து அரச ஊழியர்களினதும் பொறுப்பாகும் என, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அத்துடன், சேவைகளை வழங்கும் போது எந்தவிதமான முறைக்கேடுகளும் இடம்பெறுவதற்கு இடமளிக்கக் கூடாது என்றும், ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

நேற்று பிற்பகல், மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களத்திற்குச் சொந்தமான வேரஹெர அலுவலகத்திற்கு திடீர் கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்ட இவ்வாறு தெரிவித்தார்.

புகைப்படம் எடுப்பது முதல் சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கும் வரையான அனைத்து பிரிவுகளையும், ஜனாதிபதி பார்வையிட்டார்.

அதனைத்தொடர்ந்து சிரேஷ்ட அதிகாரிகள் உள்ளிட்ட அலுவலக பணிக்குழாமினரை சந்தித்து, நிறுவனத்தின் செயற்பாடுகள் குறித்து கேட்டறிந்தார்.

‘நேரம் அனைவருக்கும் மிகவும் பெறுமதியானதாகும்.

எனவே சேவை பெறுநர்களுக்கு உடனடியாக தமது தேவைகளை நிறைவேற்றிக் கொடுப்பதற்காக அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும்.’

தொழில் வல்லுனர்களைப் போன்று சாதாரண மக்களுக்கான சேவையையும் உடனடியாக நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். என ஜனாதிபதி குறிப்பிட்டார்.

‘சேவையொன்றை பெற்றுக் கொள்வதற்காக வருகை தருகின்ற ஒருவருக்கு, அதனை பொறுப்பேற்ற நேரத்தை குறிப்பிட்டு, மீண்டும் அதனைப் பெற்றுக் கொள்ள வர வேண்டிய நேரத்தையும் அறிவிப்பது முக்கியமானதாகும்.

அதன் மூலம் நிறுவனத்தில் வீணாக நேரத்தைக் கழிக்காது, தங்களுடைய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு மக்களுக்கு முடியுமாக இருக்கும்.’

மக்களுடன் கலந்துரையாடி பிரச்சினைகளை தீர்க்க வேண்டியதன் அவசியத்தையும், ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

நாட்டின் அதிகளவான மக்களுக்கு சேவையை வழங்கும் நிறுவனமான மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் போன்ற நிறுவனம், எப்போதும் முன்னுதாரணமாக செயற்பட வேண்டியது மிகவும் முக்கியமானதாகும்.

இதன் போது ஊழல், மோசடிகளுக்கு இடமளிக்காதிருப்பதற்கு, அனைத்து அதிகாரிகளும் உறுதியாக செயற்பட வேண்டும்.

ஊழியர் வெற்றிடங்கள் இருக்குமானால் 54 ஆயிரம் பட்டதாரிகளில் இருந்து பொருத்தமானவர்களை அதற்காக தெரிவு செய்ய முடியும். என ஜனாதிபதி குறிப்பிட்டார்.

நடைமுறையிலுள்ள முறைமைகள் ஒரு மாத காலப்பகுதியில் மாற்றப்பட வேண்டும் என்றும், அதனைக் கண்காணிப்பதற்காக தான் மீண்டும் வருகை தருவதாகவும், ஜனாதிபதி குறிப்பிட்டார்.

அரசியல்வாதிகள் மற்றும் அரச ஊழியர்களின் செயற்பாடுகளின் காரணமாக மக்கள் அதிருப்தியடைந்துள்ளனர். அதனை மாற்றுவதற்கு இரு தரப்பினரும் பொறுப்புடனும் அர்ப்பணிப்புடனும் செயற்பட வேண்டும். என ஜனாதிபதி குறிப்பிட்டார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் வைத்தியசாலைக்கும், கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டார்.

வைத்தியசாலையில் நிலவும் அனைத்து குறைபாடுகளையும், உடனடியாக நிவர்த்தி செய்து, அதனை முழுமையாக செயற்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், ஜனாதிபதி குறிப்பிட்டார்.

வைத்தியசாலையில் 68 விசேட வைத்தியர்களுக்கான தேவை இருந்த போதும், அது 40 பேரின் மூலமே நிறைவேற்றப்படுகின்றது.

சுமார் 100 சாதாரண வைத்தியர்களுக்கான தேவை உள்ள போதும், அதனை சுமார் 20 வைத்தியர்களே நிறைவேற்றி வருகின்றனர்.

700 கட்டில்கள் மற்றும் 9 விடுதி தொகுதிகளை கொண்ட வைத்தியசாலையில், தற்போது 4 விடுதிகள் மாத்திரமே செயற்படுத்தப்படுகின்றது என, அதிகாரிகளால் சுட்டிக்காட்டப்பட்டது.

அதனையடுத்து, அனைத்து குறைபாடுகளையும் உடனடியாக நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு, ஜனாதிபதி பணிப்புரை விடுத்தார்.

வெற்றிடங்களுக்காக ஆட்சேர்ப்பு செய்யும் போது, அதற்கான அறிவித்தல்களை பிரசுரித்து, உரிய முறைமைகளுக்கேற்ப அதனை மேற்கொள்ளுமாறும், ஜனாதிபதி குறிப்பிட்டார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, காலி முகத்திடலுக்கு அருகாமையிலுள்ள, பாதுகாப்பு அமைச்சின் வளாகத்திற்கும், கண்காணிப்பு விஜயம் மேற்கொண்டார்.
சுற்றியுள்ள பகுதிகளை அழகாகவும் முறையாகவும் பேணி வருவது தொடர்பாக, இராணுவத்தளபதி மற்றும் சிரேஷ்ட அதிகாரிகளுடன், ஜனாதிபதி கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

அத்துடன், முறையான திட்டமொன்றினூடாக, வளாக சூழலை ஒழுங்குபடுத்தும் நடவடிக்கைகளை உடனடியாக நிறைவேற்றுமாறும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பணிப்புரை விடுத்தார். (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!