மன்னார் – மதவாச்சி பிரதான வீதி, உயிலங்குளம் சிறுநீலாசேனை பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியால் சுடப்பட்டே குடும்பஸ்தர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
உயிரிழந்தவர் 2 பிள்ளைகளின் தந்தையான 41 வயதுடைய மாரி தர்மராசா என இனங்காணப்பட்டுள்ளார்.
குறித்த குடும்பஸ்தர் மனைவி பிள்ளைகளை பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில், உயிலங்குளம் சிறுநீலாசனை பகுதியில் தனிமையில் தங்கி இருந்து கூலித் தொழில் செய்துவந்தவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், குறித்த குடும்பஸ்தர் தங்கி இருந்த வீட்டிற்கு முன் வீதியில் இனந்தெரியாக நபர்களால் சுடப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பில் மன்னார் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில் மன்னார் பொலிஸார் சம்பவ இடத்திற்கு வந்து சடலத்தை பார்வையிட்டனர்.
பின்னர் தடயவியல் நிபுணத்துவ பொலிஸார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணைகளை மேற்கொண்டனர்.
இந்நிலையில், மன்னார் மாவட்ட பதில் நீதவான் இ.கயஸ் பெல்டானோ இன்றைய தினம் சம்பவ இடத்திற்குச் சென்று சடலத்தை பார்வையிட்டதோடு,சடலத்தை மன்னார் வைத்தியசாலையில் ஒப்படைக்குமாறு உத்தரவிட்டார்.