முஸ்லீம் மக்களை வடக்கிலிருந்து பிரபாகரன் வெளியேற்றியமை சரியானது என்பதை ரவூப் ஹக்கீம் ஏற்றுக் கொண்டிருக்கின்றார் என பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
வவுனியாவில் தோணிக்கல் பகுதியில் கம்பரலிய வேலைத்திட்டத்தில் புதிதாக அமைக்கப்பட்ட விளையாட்டு பயிற்ச்சி தடாகத்தினை திறந்து வைத்ததன் பின்னர் உரையாற்றும்போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
முஸ்லீம் பயங்கரவாதிகளையும் பிரபாகரனையும் ஒப்பிட்டு பேச வேண்டாம் என அண்மையில் முஸ்லீம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் கூறியுள்ளார். அவரின் அந்தக் கருத்தினை நான் வரவேற்கின்றேன். ஏன் எனில் தற்போது உள்ள முஸ்லீம் தலைவர்களில் பலர் வடக்கிலிருந்து முஸ்லீம்களை சொப்பின் பையுடன் துரத்திவிட்டார்கள். ஒட்டு மொத்த முஸ்லீம்களையும் வெளியேற்றி விட்டார்கள் என்று பேசி வரும் நிலையில் ஹக்கீம் அவர்களின் பேச்சு வர வேற்கத்தக்கது. இதனூடாக புலிகள் முஸ்லீம் மக்களை வடக்கிலிருந்து வெளியேற்றியமை சரியானது என்பதை ஹக்கீம் ஒத்துக் கொண்டிருக்கின்றார் போல் தெரிகின்றது.
நாங்கள் எமது தமிழ் மக்கள் யுத்த காலத்தில் ஒவ்வொரு இடமாக மாறி மாறி இடம்பெயர்ந்து சென்றார்கள். ஆனால் தீர்க்க தரிசன பார்வையில் பிரபாகரன் அந்த முஸ்லீம் மக்களை வெளியேற்றியதன் காரணத்தினால். அவர்கள் குறுகிய காலம் கஸ்டப்பட்டாலும். இன்று கல்வியில், வேலை வாய்ப்பில், வசதியில் அவர்கள் எமது சமூகத்துடன் ஒப்பிடும்போது முதலாவதாக இருக்கின்றார்கள். சொப்பின் பையுடன் வடக்கிலிருந்து வந்தேன் என்று பாராளுமன்றத்தில் பேசுபவர்கள் கூட கோடீஸ்வராக வந்திருக்கின்றார்கள். எனவே முஸ்லீம் காங்கிரஸின் தலைவர் முஸ்லீம்களை வடக்கிலிருந்து வெளியேற்றியமை சரியென ஏற்றுக் கொண்டதை நான் பெரிய விடயமாக பார்க்கின்றேன் என்று தெரிவித்தார்.