மீண்டு இந்தியாவிடம் வீழ்ந்தது பாகிஸ்தான்!

பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 89 ஓட்டத்தினால் வெற்றிபெற்றுள்ளது.

ஐ.சி.சி 12 ஆவது உலகக் கிண்ணத் தொடரின் 22 ஆவது போட்டியில் விராட் கோலி தலைமையிலான இந்தியா, சர்ப்ராஸ் அஹமட் தலைமையிலான பாகிஸ்தான் அணிகளுக்கிடையே நேற்று மாலை 3.00 மணியளவில் மான்செஸ்டரில் ஆரம்பமானது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பாகிஸ்தான் அணி களத்தடுப்பை தெரிவுசெய்ய இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாடி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுக்களை இழந்து 336 ஓட்டங்களை பெற்றது.

337 என்ற வெற்றியிலக்கை நோக்கி பாகிஸ்தான் அணி துடுப்பெடுத்தாடி வந்தபோது 35 ஆவது ஓவரில் 6 விக்கெட்டுக்களை இழந்து 166 ஓட்டங்களை பெற்றிருந்தபோது போட்டியில் மழை குறுக்கிட்டது. இதனால் ஆட்டம் இடை நிறுத்தி வைக்கப்பட்டது.

பாகிஸ்தான் அணியின் சார்பில் அதிகபட்சமாக பக்தர் ஜமான் 62(75) ஓட்டத்தையும், பாபர் அசாம் 48(57) ஓட்டத்தையும் பெற்று ஆட்டமிழந்ததுடன் இமாட் வாஸிம் 22(20) ஓட்டத்துடனும், சதாப் கான் ஓரு ஓட்டத்துடனும் ஆட்டமிழக்காதிருந்தனர்.

இரண்டாவது முறை மழை குறிக்கிட்டதால் டி.எல்.எஸ். முறைப்படி ஆட்டம் 40 ஓவர்களாக மட்டுப்படுத்தப்பட்டதுடன் பாக்கிஸ்தான் அணிக்கு வெற்றியிலக்காக 302 ஓட்டம் நிர்ணயிக்கப்பட்டது. அதன்படி பாகிஸ்தான் அணிக்கு 30 பந்துகளில் 136 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான நிலை உருவாகியது.

எனினும் தொடர்ந்து துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணியினரால் மட்டுப்படுத்தப்பட்ட 40 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டினை இழந்து 212 ஓட்டங்களை மாத்திரமே பெற முடிந்தது.

இதனால் பாகிஸ்தான் அணி 89 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்தியாவிடம் சர்வதேச ஒருநாள் உலகக் கிணண வரலாற்றில் 7 ஆவது முறையாகவும் தோல்வியைத் தழுவியது.

இமாட் வாஸிம் 46 (39) ஓட்டத்துடனும், சதாப் கான் 20(14) ஓட்டத்துடனும் ஆட்டமிழக்காதிருந்ததுடன், பந்து வீச்சில் இந்திய அணி சார்பில் குல்தீப் யாதவ், ஹர்திக் பாண்டியா, விஜய் சங்கர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

 

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!