சர்வஜன வாக்கெடுப்பினை கொண்டுவந்து ஜனாதிபதித் தேர்தலை தள்ளிப் போடுவதற்கு யாராவது முயன்றால் அதற்கு தாம் ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை எனத் தெரிவித்துள்ள பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபே குணவர்தன, அவ்வாறு ஒரு நிலை ஏற்பட்டால் நாட்டு மக்களை வீதியில் இறக்கி நாடு முழுவதையும் ஸ்தம்பிதம் அடையச் செய்வோம் எனத் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே இவ்வாறு தெரிவித்தார்.
ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையில் முரண்பாடு, இருவரும் தற்போது எதிரும் புதிருமாக இருக்கின்றார்கள்.
மறுபுறும் கொண்டுவரப்பட்ட சட்டத்திற்கும் அதிகாரத்திற்கும் இடையில் பாரிய இடைவெளி ஏற்பட்டிருக்கின்றது.
ஜனாதிபதி கூறும் எந்த விடயங்களையும் சபாநாயகர் கவனத்தில் எடுத்துக் கொள்வது கிடையாது. ஜனாதிபதியை ஐந்து சதத்திற்கும் சபாநாயகர் கணக்கெடுப்பதில்லை.
அவர் வேறு ஒரு உலகத்தில் பயணித்துக் கொண்டிருக்கின்றார். இந்த நிலையில் நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு பொறுப்பான பொலிஸ் மற்றும் இராணுவத்தினருக்கு யார் சொல்வதை கேட்பது என்ற பிரச்சினை எழுந்துள்ளது.
ஜனாதிபதி சொல்வதை கேட்பதா? அல்லது பிரதமர் சொல்வதை கேட்பதா? ஜனாதிபதி சொல்வதை செய்தால் பிரதமர் கோவப்படுவார். அல்லது பிரதமர் சொல்வதை செய்தால் ஜனாதிபதி கோவப்படுவார், இந்நிலைதான் தற்போது காணப்படுகின்றது.
இதேபோன்று அதிகாரிகள் மத்தியில் சிக்கல் எழுந்துள்ளது. சபாநாயகர் தெரிவுக்குழு விசாரணைக்கு வருமாறு பணிப்பு விடுகின்றார்.ஜனாதிபதி செல்ல வேண்டாம் என்று பணிக்கின்றார். இதுபோன்ற பல சிக்கல்களுக்கு நாடு சிக்குண்டுள்ளது.
தற்போது எமக்கு புதிய தகவல்கள் கிடைக்கின்றன. தற்போதய நிலையில் பாராளுமன்றத் தேர்தல் வேண்டுமா இல்லை என்பது தொடர்பில் மக்கள் ஆணையை கேட்க ஜனாதிபதி தீர்மானித்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
சர்வஜன வாக்கெடுப்பு நடாத்த ஜனாதிபதி எண்ணியுள்ளதாக கூறப்படுகின்றது. மறுபுறம் எதிர்வரும் 18ம் திகதி பாராளுமன்றத்தினை கலைக்கும் யோசனையை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க பிரதமர் ரணில் விக்கிரமசிங்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
அவ்வாறு ரணில் யோசனை முன்வைத்தால் எதிர்க்கட்சியினராகிய நாம் அதற்கு ஆதரவு வழங்குவோம், மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றுக் கொடுப்போம், மக்கள் சிறந்த பலமான மூன்றில் இரண்டு பெரும்பான்மையை தனியாக கொண்ட ஒரு அரசாங்கத்தினை அமைப்பதற்காக.
ஆனால் சர்வஜன வாக்கெடுப்பினை கொண்டுவந்து ஜனாதிபதித் தேர்தலை தள்ளிப் போடுவதற்கு யாராவது முயன்றால் அதற்கு நாம் ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை. நாட்டு மக்களை வீதியில் இறக்கி நாடு முழுவதையும் ஸ்தம்பிதம் அடையச் செய்வோம். என குறிப்பிட்டுள்ளார். (சி)