75இ381 பேருக்கான வாக்கெடுப்புக்காக 135 வாக்கடுப்பு நிலையங்கள் தயார் நிலையில் இருப்பதோடு தேர்தல் நடவடிக்கைகளுக்காக 1806 அரச உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபட்டுள்ள நிலையில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான திருமதி ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
நாளை நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்தார்.
மேலும் கருத்து தெரிவித்த அவர்………
நாளைய தினம் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு நமது மாவட்ட செயலகம் மற்றும் தேர்தல் திணைக்களமும் இணைந்து மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட 75இ 381 வாக்காளர்களுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான 135 வாக்கெடுப்பு நிலையங்கள் உருவாக்கப்பட்டு அதற்கான உத்தியோகத்தர்கள் போலீசாரோடு அந்தந்த நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு இருக்கின்றார்கள் அவர்கள் குறித்த இடங்களுக்கு சென்று சேர்ந்து உள்ளதாக அறிக்கையிட்டிருக்கின்றார்கள்.
அதேவேளை இவற்றை மேற்பார்வை செய்வதற்காக 28 வலயங்களாக பிரிக்கப்பட்டு 28 வலயங்களுக்கும் ஆன உதவி தெரிவத்தாட்சி அலுவலர்கள் நியமிக்கப்பட்டு அவர்கள் தங்களது பகுதிக்கான வாக்கெடுப்பு நிலையங்களை கண்காணிப்பதற்காக நியமித்து இருக்கின்றோம்.
அதேவேளையில் பெரும் பாகங்களாக மெகா சோன் என்று சொல்லப்படுகின்ற 7 வலயங்களாக பிரிக்கப்பட்டு அதற்கான உத்தியோகத்தர்களும் பணிக்கு அமர்த்தப்பட்டு இருக்கின்றார்கள்இ அத்தோடு 9 வாக்கெண்ணும் நிலையங்கள் மாவட்ட செயலகத்தில் அமைக்கப்பட்டு அவற்றிற்கான அலுவலர்களும் நமது மாவட்டத்திலும் மற்றும் பிற மாவட்டங்களிலிருந்தும் கடமைகளில் ஈடுபடுவதற்காக பணிக்கு அமர்த்தப்பட்டு இருக்கின்றார்கள்.
அந்த வகையில் நடைபெறவுள்ள தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் எங்களுடைய மாவட்ட செயலகம் தினால் முன்னெடுக்கப்பட்டு இருக்கின்ற அதே வேளையில் மாவட்டத்தின் உடைய வாக்காளர்கள் நாளை நடைபெற இருக்கின்ற வாக்கு பதிவுகளில் காலதாமதம் இல்லாமல் நேரத்தோடு சென்று தங்களுடைய வாக்குகளை பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
நீதியானதும் நியாயமானதுமான தேர்தல் நடைபெறுவதற்கு ஏற்ற வகையில் பொலிஸ் உத்தியோகத்தர்களுடன் ஒன்றிணைந்து அந்த விடயங்களை நாங்கள் மேற்கொண்டு வருகின்றோம் இதுவரை 15 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்று இருக்கின்றன அதிலும் பாரதூரமான முறைப்பாடுகள் எதுவும் இல்லை அவை தொடர்பாக உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு இருக்கிறது . என தெரிவித்தார். (சி)