தமிழ் நாட்டை அரசியல் ரீதியாக கையாள்வதில், தமிழ் தேசிய கூட்டமைப்பு பாரிய தவறிழைத்துள்ளது என, பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
இன்று, வவுனியா குருமன்காட்டில் அமைந்துள்ள, தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைமைச் செயலகத்தில், ஊடகவியலாளர்களின் கேள்விக்கு இவ்வாறு பதில் அளித்தார்.
ஜனாதிபதியின் செயற்பாடுகள் நல்லவிதமாக இருந்த போதும், இப்போது ஜனநாயகத்தை பறிக்கும் செயற்பாடாகவே அவை காணப்படுகின்றன.
எதிர்காலத்தில் ஜனாதிபதியின் வெற்றி வாய்ப்பு கேள்விக்குறியாகவே இருக்கும். ஜனாதிபதியும் பிரதமரும் தமிழ் மக்களின் பிரச்சனையில் முழுமையாக அக்கறை கொள்ளவில்லை, இந்திய பிரதமர் மோடியை சந்தித்த வேளை தமிழ் மக்களின் பிரச்சினையில் இந்தியா கவனம் செலுத்த வேண்டும் என, கூட்டமைப்பு கோரிக்கை விடுத்தது.
தமிழ் மக்கள் பிரச்சினை விடயத்தில் உதவி செய்ய காத்திருப்பதாக, மோடியால்தெரிவிக்கப்பட்டது இந்தியாவின் பாதுகாப்பை நிர்ணயம் செய்கின்ற தமிழ் மக்கள் இருக்கிறார்கள், தமிழ் மக்களின் பிரச்சினையில் இந்தியா கரிசனைகொள்ள வேண்டிய கடமை இருக்கின்றது.
இந்தியாவின் பாதுகாப்பு தொடர்பில் தமிழ் மக்களின் பங்களிப்பை இந்தியா உணர்ந்துள்ளது இந்தியா எமதுநாட்டுக்கு அருகாமையில் இருந்த காரணத்தினால்தான் பல நாடுகள் இலங்கையில் காலூன்றவில்லை.
எமது மக்களின் விடுதலை இந்தியாவை சார்ந்து இருப்பதால் இந்தியாவை புறந்தள்ள முடியாது தமிழ் நாட்டை அரசியல் ரீதியாக கையாள்வதில் தமிழ் தேசிய கூட்டமைப்பு பாரிய பிழை விட்டுள்ளது.
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் காரணமாக இலங்கையின் பொருளாதாரம் அதள பாதாளத்திற்கு சென்றுள்ளது.
முஸ்லிம் தலைவர்கள் எல்லோரும் ஒன்றாக இராஜினாமா செய்து மாபெரும் தவறை செய்துள்ளார்கள், இவர்கள் ஒரு பொது நோக்கத்திற்காக, நாட்டின் நலனுக்காக இராஜினாமா செய்யவில்லை.
புத்த பிக்குகள் அரசியல் ரீதியாக தலையிடுவதற்கான வடிவத்தை முஸ்லிம் தலைமைகள் கொடுத்துள்ளார்கள்.
தமிழ் அரசியல் தலைமைகளின் ஒற்றுமை என்பது கானல் நீராக மாறியுள்ளது எங்களை பரித்தாளுகின்ற சக்தியாக நாங்கள் மாறிக்கொண்டிருக்கின்றோம்.
ஒரு சில அரசியல் தலைவர்களின் மதவாத சிந்தனையின் காரணமாகவே ஐ.எஸ்.ஐ.எஸ் உருவானது தமிழ்மக்களின் போராட்ட காலத்தில் மதவாதம் சாதியவாதம் என்பன தலைதூக்கியிருக்கவில்லை, என குறிப்பிட்டுள்ளார்.(சி)