மதத்தை கூறி இன அழிப்பு நடக்க கூடாது – சஜித்!!

மதம் என்ற பெயரில், இன அழிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படக் கூடாது என, புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

இன்று காலை, மன்னார் பொது விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் இவ்வாறு குறிப்பிட்டார்.

எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படவுள்ள அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பாக, தற்போது அத்திட்டங்களை முன்வைக்க காத்திருக்கின்றோம்.

பாதிக்கப்பட்ட அனைத்து மக்களையும், என்னுடைய தலைமைத்துவத்தின் கீழ், இன, மத கட்சி பேதமின்றி, மீண்டும் அவர்களை மீள்குடியேற்றுவதற்கான திட்டங்களை நான் முன்னெடுக்கவுள்ளேன்.

நெடுங்குளம், அவலங்குளம் போன்ற நீர்த்தேக்கங்களை அபிவிருத்தி செய்து, குளங்களை அபிவிருத்தி செய்து, உங்களுடைய விவசாய நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பேன் என்பதை கூறிக்கொள்கின்றேன்.

தலைமன்னார், பேசாலை, சிலாவத்துறை போன்ற பகுதிகளில் உள்ள துறைமுகங்களை, எனது தலைமையின் கீழ் அபிவிருத்தி செய்வதற்கான நடவடிக்கைகளை எடுப்பேன்.

தலைமன்னாரில் இருந்து திருகோணமலை வரை, நான்கு வழிப்பாதையாக அபிவிருத்தி செய்வதற்கான நடவடிக்கைகளை எடுக்கவுள்ளோம்.

அதேபோன்று புத்தளத்தில் இருந்து மன்னார் வரையான வீதியை இணைப்பதற்கான நடவடிக்கைகளை, வில்பத்து காட்டிற்கு எவ்வித பாதீப்புக்களும் இல்லாமல், அதனை இணைப்பதற்கான நடவடிக்கைகளையும் எடுப்பேன். மீன்பிடியை அபிவிருத்தி செய்வேன்.

மீன்பிடி கைத்தொழிலாளர்களுக்கு தேவையான அணைத்து உபகரணங்களையும் பெற்றுத்தர, அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பேன்.

மீன்பிடி கைத்தொழில்துறையை, எவ்வித பிரச்சினைகளும் இன்றி முன்னெடுத்துச் செல்வதற்கான நடவடிக்கைகளை நான் எடுப்பேன்.

கடல் பிரதேசத்தில் இருந்து, 200 மயில்களுக்கு அப்பால் உள்ள கப்பல் துறைமுகங்களை, எங்களுக்கு ஏற்றது போல் முடைமுறைப்படுத்தி, அரசாங்கத்திற்கு தேவையான அனைத்து அபிவிருத்தி திட்டங்களையும், உங்களுக்காக எடுத்துச் செல்லுவதற்கான நடவடிக்கைகளையும் எடுப்பேன். விவசாயத்துறையை கட்டியெழுப்புவதற்கான சகல நடவடிக்கைகளையும் நாங்கள் எடுப்போம்.

காய்கறி செய்கை, பழச் செய்கை, சிறு பயிர்ச் செய்கை, சேனைப்பயிர்ச் செய்கை, தேயிலை, இறப்பர், தென்னை போன்ற செய்கைகளில் ஈடுபடுவோருக்கு, இலவசமாக பசளையை வழங்கி, விவசாய துறையை மேம்படுத்துவதற்கான சகல நடவடிக்கைகளையும் முன்னெடுப்பேன்.

44 இலட்சம் மாணவர்கள் பாடசாலை செல்கின்றனர். என்னுடைய தந்தை ரனசிங்க பிரேமதாச அவர்கள், அன்றைய காலம் அனைத்து மாணவர்களுக்கும் இலவச சீருடைகளையும் பகல் உணவையும் வழங்கியிருந்தார்.

ஆனால் இப்போது எங்களுடைய பிரதிவாதிகள் அதனை நிறுத்தி இருக்கின்றார்கள். எங்களுடைய அரசாங்கத்திலே, நான் தலைமை வகிக்கின்ற அரசாங்கத்திலே, எதிர்காலத்திலே இந்த 44 இலட்சம் மாணவர்களுக்கும், இலவசமாக இரண்டு சீருடைகளும், ஒரு பாதணியும், பகல் உணவையும் இலவசமாக வழங்குவேன்.

மன்னார் மாவட்டத்தில் 5 பிரதேச செயலகங்கள் இருக்கின்றது. குறித்த பிரதேச செயலகங்களுக்கு கைத்தொழில் பேட்டைகளை உருவாக்குவதற்கான நடவடிக்கைகளை எடுப்போம்.

மன்னார் மாவட்டத்தில் மாத்திரமல்ல, நாடளாவிய ரீதியில் இருக்கின்ற அனைத்து பிரதேச செயலகங்களிலும், இந்த கைத்தொழில் பேட்டைகள் உருவாக்கப்படும்.

அதன் மூலம் இளைஞர் யுவதிகளின் வேலைவாய்ப்புக்களை ஏற்படுத்துவதே எங்களுடைய நோக்கம். ஒவ்வெறு பிரதேச செயலகங்களிலும், தொழில்நுட்பக் கல்லூரி ஒன்று உருவாக்கப்படும்.

இதன் மூலம் தகவல் தொழில்நுட்பம், கணினி தொழில்நுட்பம், ஆங்கில அறிவு என்பவற்றை இலவசமாக வழங்கி, இதன் மூலம் வெளியேறுகின்ற அனைத்து இளைஞர் யுவதிகளும், பிரதேச செயலகங்களில் உருவாக்கப்படும் தொழிற் பூங்கா என்கின்ற மையத்தினூடாக சேவையாற்றி, சிறந்ததொரு கைத்தொழில் துறையை மேம்படுத்துவதற்கான நடவடிக்கையை எடுப்பேன்.

ஏழை மக்களுக்கு தற்போது சமூர்த்தி என்கின்ற வேலைத்திட்டம் நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. அந்த வகையிலே இலங்கையில் இருந்து நாங்கள் ஏழ்மையை நீக்க வேண்டும்.

ஏழ்மை இந்த நாட்டிலே இருக்கக்கூடாது என்பதற்காக தான், இந்த சமூர்த்தி வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.

அன்று என்னுடைய தந்தை நெறிப்படுத்திய ஜனசவி என்கின்ற வேலைத்திட்டத்தையும், இந்த சமூர்த்தி திட்டத்தோடு, இந்த மக்களுக்கு வழங்கி, இந்த நாட்டில் ஏழ்மையை இல்லாது ஒழிப்பதற்கான அனைத்து வேலைத்திட்டங்களையும் முன்னெடுப்போம்.

இத்திட்டம், மன்னார் மாவட்டத்தில் உள்ள 5 பிரதேச செயலக பிரிவுகளிலும் உள்ள, அனைத்து கிராம மக்களுக்கும் வந்து சேரும் என்பதை உறுதியாக தெரிவித்துக் கொள்கின்றேன்.

தற்போது கடமையாற்றுகின்ற முன்பள்ளி ஆசிரியர்கள் அனைவருக்கும், அரசாங்க சம்பளத்தை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படும்.

பாலர் பாடசாலைகளுக்கு தனித்தனியான கட்டிடங்கள், பிள்ளைகள் விளையாடுவதற்கு சிறுவர் பூங்கா, பாலர் பாடசாலைமாணவர்களுக்கான பகல் உணவு ஆகியவற்றையும் இலவசமாக வழங்க நடவடிக்கை எடுப்பேன்.

உப ஆசிரியர்களுக்கும் அரசாங்க சம்பளம் வழங்கப்படும். பாலர் பாடசாலை கல்வியையும், இலவச கல்விக்கு உட்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பேன்.

ஒருமித்த இந்த இலங்கை நாட்டிலே, அதிகபட்ச அதிகாரப்பகிர்வை, அனைவருக்கும் இன, மத மொழி கட்சி பேதமின்றி வழங்குவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பேன் என்பதை, உறுதியாக மன்னார் மண்ணிலே கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.

அதேபோன்று சிறுவர் துஸ்பிரயோகம், இனவாதத்தை தூண்டுவோருக்கு உயர்ந்தபட்ச தண்டனையை வழங்குவதற்கு, நான் ஒருபோதும் பின்நிற்கப் போவதில்லை.

நான் ஒரு சிறந்த ஒரு பௌத்தன் என்பதை இந்த இடத்தில் கூறிக்கொள்ள விரும்புகின்றேன். பௌத்த கொள்கைகளை, கோட்பாடுகளை சிறந்த முறையில் பின்பற்றி நடக்கக்கூடிய ஒரு பௌத்தனாக இருக்கின்றேன்.

இனத்தை வைத்தோ, மதத்தை வைத்தோ, மதங்களை, இனங்களை ஒருபோதும் அழிக்க முடியாது. புத்த பெருமானும், ஒருபோதும் இனங்களை மையாமாக வைத்து, மதங்களை மையமாக வைத்து, மத அழிப்பு நடவடிக்கைகளை, இன அழிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளக்கூடாது. என குறிப்பிட்டுள்ளார். (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!