அரசு, அரசியல் பழிவாங்கல் : கோட்டாபய!!

தேர்தல் காலத்தில் மட்டுமே, பிரபல ரக்பீ வீரர் வசீம் தாஜுடீனின் கொலை வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுவதாகவும், ஏனைய காலங்களில், அரசியல் பழிவாங்கலை மட்டுமே, அரசாங்கம் செய்து வருவதாகவும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ச குற்றம் சுமத்தியுள்ளார்.

இரத்தினபுரியில் நேற்று இடம்பெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் இவ்வாறு குறிப்பிட்டார்.

ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில், இனப்பிரச்சினைக்கான தீர்வு யோசனையில், சிங்கள மொழியில் ஒன்றும், ஆங்கிலம் மற்றும் தமிழ் மொழியில் வித்தியாசமாகவும் பதங்கள் இணைக்கப்பட்டிருக்கின்றன.

சிங்களத்தில் ஒற்றையாட்சி என்றும், தமிழில் ஐக்கியம் என்றும் காணப்படுகின்றது. ஆகவே நாட்டைப் பிளவடையச் செய்கின்ற சமஸ்டி தீர்வுக்கும் அப்பாற் சென்ற தீர்வை வழங்குவதற்கான அனுமதியை உங்களிடம் எதிர்பார்க்கின்றார்கள். அதனை வழங்குவீர்களா? நாட்டைப் பிரிக்க அனுமதிப்பீர்களா?

போரை முடிவுக்கு கொண்டு வந்தது, நாட்டை ஐக்கியப்படுத்தி பிரிவடையச் செய்யாமல் இருப்பதற்காக. அதேபோல தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரத்து 500 ரூபா சம்பள உயர்வை வழங்குவதாக உறுதியளித்திருப்பது கேலிக்குரிய வாக்குறுதியாகும்.

ஆட்சியில் தற்போது அவர்களே இருக்கின்றார்கள். தீபாவளி முற்கொடுப்பனவையே வழங்க முடியாத அவர்கள், எவ்வாறு ஆயிரத்து 500 ரூபா சம்பள உயர்வை வழங்கப் போகிறார்கள் என்பதை சற்று சிந்தித்துப்பாருங்கள்.

அதேபோல வாரத்திற்கு ஒருமுறை ராஜபக்சவினரை கைது செய்யுமாறு, பொலிஸ் நிதிமோசடி விசாரணைப் பிரிவுக்குப் பொறுப்பாகவிருந்த, முன்னாள் பிரதி பொலிஸ்மா அதிபருக்கு, அழுத்தம் பிரயோகிக்கப்பட்டுள்ளது.

வழக்கு ஒன்றும் தேவையில்லை, சட்டமா அதிபர் திணைக்களத்தை கட்டுப்படுத்துவதாகவும் அவருக்கு கூறியிருக்கிறார்கள். முழு ஆட்சிக்காலத்திலும் அரசியல் பழிவாங்கலுக்கே பயன்படுத்தியிருக்கும் இந்த அரசாங்கத்தைப் போல, வேறு அரசாங்கத்தை வரலாற்றிலும் பார்க்க முடியாது.

வசிம் தாஜுடீனின் வழக்கு விவகாரமும் தேர்தல் நெருங்கும் போதுதான் வருகின்றது. விசாரணைகளைக்கூட தேர்தல் காலத்திற்குப் பயன்படுத்துகிறது இந்த அரசாங்கம்’ என குறிப்பிட்டுள்ளார். (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!